கோத்தாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை! 58 பேர் பாதுகாப்புக் கடமையில் என்கிறது அரசாங்கம்
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் உயிருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. கோத்தபாயவின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. அவரின் பாதுகாப்புக்காக 58 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே எழுப்பிய கேள்விக்கு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு சபையில் சமர்ப்பித்த பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
சுசந்த புஞ்சிநிலமே எம்.பி. தனது கேள்வியில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களில் தற்போது அதிக உயிர் அச்சுறுத்தலுள்ள செயலாளர் யார் என்பதையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை யாது? தற்போது இப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், தற்போதுள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு? நிலவும் உயிர் அச்சுறுத்தலுக்கு ஏற்றவாறு கோத்தபாயவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா? அவரின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்கிறதா? என்றும் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு சபையில் சமர்ப்பித்த பதிலில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் பாதுகாப்புக்காக 50 படை வீரர்களும், 8 இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவரின் பாது காப்புக்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.