Breaking News

மைத்திரி வழங்க முன்வந்த கௌரவப் பதவியை நிராகரித்தார் மகிந்த

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க முன்வந்த கெரளவப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசியலை விட்டு விலகினால் கௌரவமான பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவிடம் கடந்த வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு அன்றிரவு கூடி, மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோர முடிவு செய்தது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தக் குழு இலங்கை ஜனாதிபதியை சந்தித்து,இது தொடர்பான தமது முடிவைத் தெரியப்படுத்தியது. அப்போது, மைத்திரிபால சிறிசேன, பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடவோ, தேசியப்பட்டியலிலோ மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அவர் அரசியலை விட்டு விலகினால், கௌரவமான பதவி ஒன்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தகவல் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, மைத்திரிபால சிறிசேன வழங்க முன்வந்த கௌரவப் பதவியை அவர் நிராகரித்துள்ளார்.

மக்கள் தன்னை தமக்குச் சேவையாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார். இதுபற்றிய விரிவான அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.