Breaking News

விடுதலைப் போராட்டத்தை விலை பேசிவிடக்கூடாது

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்காகப் போராடிய மாமனிதர்களில் தந்தை செல்வநாயகத்தின் பங்கு அளப்பரியது.


ஆண்டாண்டுகால மாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்துவந்த தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் இனத்தின் அரசியல் உரிமை களை கேட்டதே அவர்கள் செய்த தவறு என சிங்கள தேசம் இன்ன மும் மமதையில் இருகின்றது.

ஆங்கிலேயக் காலனித்து வத்திலிருந்து தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், சேர்.பொன். இராமநாதன், ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற பெரும் தமிழ்த் தேசியத் தலைமைகளின் பெரும்பங்களிப்புடன் வென்றெடுத்த இலங்கையின் சுதந்திரத்தை சிங்கள தேசம் மட்டும் அனுபவிக்க முனைந்ததே இத்தனை ஆண்டு கால இனவிடுதலைப் போராட்டம். 1949 ஆம் ஆண்டு மலையக மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட நாள்முதல் தென்னி லங்கை, சிங்கள இனவாதத்திலும், பெளத்த மதவாதத்திலும் ஊறிப் புரையோடிப் போனது.

1948 ஆம் ஆண்டு விடுதலையடைந்த இலங்கை இன்றுவரை இனவாதத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலைபெற முடியவில்லை. சிங்கள தேசத்திலிருந்து விடுதலையே தமிழர்களுக்கு இறுதித் தீர்வு எனத் தமிழீழக் கோரிக்கையை முதல் முதலில் முன்வைத்தவர். தந்தை செல்வநாயகமே.

1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி விஸ்வநாதன் வேலுப்பிள்ளைக்கும், ஹரியட் அன்னமாவுக்கும் மலேசிய மண்ணில் பிறந்த செல்வநாயகம் தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தார். தந்தை செல்வநாயகத்தின் தந்தை யாழ்பாணத்தின் தெல்லிப்பளையைச் சேர்ந்தவராவார். இவர் வணிக நடவடிக்கைகளுக்காக மலேசியாவில் சென்று வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கற்றதுடன் உயர் கல்வியை கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கற்றார். தனது 19 ஆவது வயதில் லண்டனில் இளமானிப் பட்டம் பெற்ற செல்வநாயகம், 1923 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட அறிஞராகவும் விளங்கினார்.

ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்துடன் சேர்ந்து கடமையாற்றிய இவர், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை நிறுவி தமிழ்த் தேசிய அரசியலின் விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டார். 1950, 60, 70 என மூன்று தசாப்தகாலமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தந்தை செல்வ நாயகத்தினதும் தமிழ்த் தேசியத்தினதும் அரசியல் மற்றும் சுய உரிமைகளை குழிதோண்டிப் புதைத்த சிங்கள அரசின் இனவாதத்தின் எதிர்விளைவே 1976.05.14 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டி.எஸ். சேனநாயக்கவிற்குப் பின்னர் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பண்டாரநாயக்கவின் காலத்தில் தனது தேர்தல் வெற்றிக்கு சிங்கள இனவாதத்தையே பகடைக்காயாகப் பயன்படுத்தினார். பண்டாரநாயக்க ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டில் அதாவது, 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையை தனிச் சிங்கள தேசமாக மாற்றியமைத்தார். அன்று விதைக்கப்பட்ட இனவாதத்தின் அறுவடையை இன்றும் மேற்கொள்கிறது சிங்கள அரசு.

இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுமென்று 1957 இல் பண்டா-செல்வா ஒப்பந்தம், 1965 இல் டட்லி- செல்வா ஒப்பந்தங்கள் மாத்திரமின்றி, பல்வேறு ஒப்பந்தங்களை தமிழ்த் தலைமைகளுடன் சிங்கள தேசம் மேற்கொண்டது. இவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தமை மாத்திரமின்றி அன்று தொட்டு இன்றுவரை தமிழர்களின் உரிமைகள் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டே வருகின்றன.

மறுக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகளை இந்த நாட்டில் வாழவைக்க வேண்டுமென்று சிங்களத் தலைமைகளிடம் மன்றாடிய தந்தை செல்வநாயகம், ஒரு தருணத்தில் நடாளுமன்றத்தில் கண்ணீர் சிந்தி தெரிவித்ததாவது. சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சிமொழியயன்றால் இலங்கை இரு தேசங்களாகப் பிரியும் என்றார்.

இலங்கை தேசத்தின் விடுதலையின் பின்னர் 29 வருடகாலமாக அரசியல் ரீதியாக தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிவந்த மாமனிதர் தந்தை செல்வநாயகம் 1977 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவரின் இறப்பு தமிழ்த் தேசிய அரசியலின் மாபெரும் வீழ்ச்சியாகப் பதியப்பட்டது. அன்று தமிழீழத் தீர்மானத்தை நிறை வேற்றிய தந்தை செல்வநாயகத் தின் கொள்கைகளை அரசியல் ரீதியாகப் பெறமுடியாது என உணர்ந்து ஆயுதப் போராட்டமே இறுதித் தீர்வு எனத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஆயுமேந்திப் போராட பல ஆயுதக் குழுக்கள் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோற்றம் பெற்றன.

வீரம் விளைந்த தமிழர் மண்ணை தமிழரே ஆழவேண்டும் என்ற வீரகோ­த்துடன் எழுச்சிபெற்ற எண்ணிலடங்காத குழுக்களில் வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமே. 33 வருடகாலமாக சிங்கள இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் விடுதலைக் களமாடிய விடுதலைப் புலிகளை சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் துணை கொண்டு மஹிந்த ராஜபக்­வின் பெளத்த பேரினவாத சிங்கள அரசு வீழ்த்தியது.

தந்தை செல்வநாயகத்தினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒருபோதும் தமிழர் நலனை மறந்து தோற்றம்பெற்ற கொள்கைகள் அல்ல. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 29 வருட காலம் அரசியல் போராட்டமும், 33 வருடகாலம் ஆயுதப் போராட்டமும் தமிழர்களுக்கென்று இந்த நாட்டில் ஒரு தனி அரசியல் உருவாகவேண்டும் என்பதற்காகவே எண்ணிலடங்காத உயிர் தியாகங்களுடன் உணர்வு ரீதியாக வும்தோற்றம் பெற்றவையே ஆகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினதும், தந்தை செல்வநாயகத்தினதும் அரசியல் கொள்கைகளை இன்றுள்ள தமிழ்த் தலைமைகள் மறந்துபோனது பெரும் வரலாற்றுப் பிழையாக மாற வாய்ப்புள்ளது. எத்தனை போராட்டங்கள், எத்தனை உயிர்த்தியாகங்கள். இவையனைத்துக்கும் சிங்கள தேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

வீரம் விளைந்த தமிழர் மண்ணை தமிழர்களே ஆழ வேண்டும் என்பதே எம் மூத்த தமிழ்த் தேசியத் தலைவர்களினதும், மாவீரர்களினதும் கனவாகும். விடுதலை என்னும் சொல்லுக்கு வீரம், அஞ்சாமை என்பது போல் எம் மூத்த தமிழ்த் தலைமைகளின் கொள்ளைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு இந்த நாட்டில் தமிழ் இனம் ஓர் உறுதியான அரசியல் தீர்வை சிங்கள அரசிடமிருந்து பெற்றுக்கொள்வது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

கொள்கைகள் என்பது குழிதோண்டிப் புதைக்கப்படுவது அல்ல. மாறாக எம்முடைய அடுத்த தலைமுறைக்கு விதைக்கப்படுவதாகும். தந்தை செல்வநாயகத்தின் வழிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இன்று ஈழத் தமிழர்களின் விடியலின் இறுதிக் களம். அரசியல் கொள்கைகள் என்பது காலத்துக்குக்காலம் மாற்ற மடையக்கூடியவை அல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்காக இவ்வினத்தின் மக்கள் மத்தியில் புதைக்கப்படுவதாகும்.

இவ்வழியையே தந்தை செல்வநாயகமும், மாவீரர்களும் கையாண்டனர். ஆனால், இன்று அந்நிலைமை வடக்கு, கிழக்கில் மாற்றமடைந்துள்ளதாக உலகத் தமிழர்கள் மத்தியில் அச்சங்கள் எழுந்துள்ளன. அதற்குக் காரணம் இன்றுள்ள தமிழ்த் தலைமைகளின் வினைத்திறனற்ற கொள்கைகளும், செயற்பாடுகளுமே ஆகும். தமிழர்களின் விடுதலைக்காகக் குரல்கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதாகும்.

65 வருட காலமாக சிங்கள அரசு அங்கேற்றிவரும் இனவாதிகளிலிலிருந்து ஒரு துளியேனும் தமிழர்கள் சுதந்திரத்தை அனுபவித்தது கிடையாது. 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் வால் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கம் என்ன? அதற்கான விடையை தமிழ்த் தலைமைகள் நன்கறியும். இன்று ஆட்சியமைத்துள்ள மைத்திரி அரசின் நிலையில்லாத கொள்கைகளை நம்பி தமிழ்த் தேசியத்தின் 65 வருடகால விடுதலைப் போராட்டத்தை எவரும் விலைபேசிவிடக்கூடாது.

மாறாக, ஒருமித்த குரல்கொடுப்பதன் மூலமே அரசியல் விடுதலை என்பது சாத்தியமாகும். இன்றுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பணிகள் இருக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாத ஐ.நா. அமர்வு, நடாளுமன்றத் தேர்தல், சர்வதேச சமூகத்தின் கவனத்தை தக்கவைத்தல், புலம்பெயர் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை செவிமடுத்தல், சிங்களத் தலைமைகளை முழுமையாக நம்பி ஏமாற்றிவிடாமல் தவிர்த்தல் என்பது முக்கியமானதாகும்.

எனவே, தந்தையினதும், மாவீரர்களினதும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக வித்திடவேண்டும் என்பதையே தமிழ்த் தலைமைகளிடம் இருந்து ஈழத்தமிழர்களும், உலகெங்கும் வாழும் எம் தொப்புள்கொடி உறவுகளும் எதிர்ப்பார்க்கின்றனர் என்றால் மிகையல்ல.

சு.நிஷாந்தன்-