மஹிந்த பிரதமர் ஆவதை மைத்திரியால் தடுக்கமுடியாது! ஆதரவு அணி கூறுகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடுக்கமுடியாது. ஜனாதிபதியின் ஆதரவை எதிர்பார்த்து நாம் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை என மஹிந்த ஆதரவுக் கூட்டணி தெரிவித்துள்ளது.
மஹிந்தவை நம்பி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி உள்ளதே தவிர கட்சியை நம்பி மஹிந்த இல்லை எனவும் அக் கூட்டணியினர் தெரிவித்தனர். மஹிந்த ஆதரவுக் கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நாராஹென்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அக் கூட்டணியின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமாயின் மஹிந்த ராஜபக் ஷவின் துணை அவசியமாகும். ஆனால் கட்சியை நம்பி மஹிந்த ராஜபக் ஷ செயற்படவில்ல. கட்சியே மஹிந்தவை நம்பி செயற்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினர்கள் தான் முன்வைத்தனரே தவிர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இதுவரையில் தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. எனவே கட்சியின் நிலைப்பாட்டை கட்சியின் தலைவரே கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது கூட்டணியினர் மஹிந்தவை நிராகரித்து மஹிந்தவை அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் மஹிந்த பிரதமர் ஆவதை ஜனாதிபதி மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது. மஹிந்தவை பிரதமர் ஆக்கியே தீருவோம் எனக் குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச
இது தொடர்பில் முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில்,
மஹிந்த அரசியலுக்கு வருவதை ஏனைய அரசியல்வாதிகள் விரும்பில்லை. இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரேயொரு அச்சுறுத்தலான நபர் மஹிந்த ராஜபக் ஷவே ஆவார். ஆகவே தான் அவரை இலக்குவைத்து இன்றும் அரசியல் காய்நகர்த்தல்கள் இடம்பெறுகின்றன. நாம் எமது போராட்டத்தை ஆரம்பித்தது இந்த நாட்டில் மாற்றம் ஒன்றை மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவேயாகும். ஆகவே அந்த மற்றத்தை மீண்டும் மஹிந்த தலைமையில் கொண்டுவரும் நோக்கத்தில் தான் நாம் களத்தில் இறங்கியிருக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால் நாட்டுக்கு சரியான தலைமைத்துவம் ஒன்று ஏற்படவேண்டும் என்றால் சில போராட்டங்களை ஏற்படுத்தியாகவேண்டும் எனக் குறிப்பிட்டார்.