Breaking News

மிகவிரைவில் நாடாளுமன்றம் கலைப்பு – உறுதி செய்தார் மைத்திரி

நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும். அடுத்த அமைச்சரவையில், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகம் பணியாற்ற வேண்டியிருக்கும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அமைச்சுக்களின் செயலாளர்களே எல்லா நிர்வாக நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள். அரச பணியாளர்களே நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, நேற்று அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார். அதேவேளை, நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த அமைச்சரவையில் அமைச்சர்கள் விஞ்சான முறைப்படி நியமிக்கப்படுவர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அமைச்சர்களின் நியமனம் தொடர்பான தேசிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சிகள் மாறும் போது, அந்த கொள்கை மாறக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.