புதிய தேர்தல் முறைமை மாற்றம் தமிழர்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் - யோகேஸ்வரன் எம்.பி
அரசினால் கொண்டு வரப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையில் தொகுதிகள் குறைக்கப்படுமானால் அம்பாறை மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியில் தமிழர் பிரதி நிதித்துவம் இழக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறையின் பாதிப்புக்கள் சம்பந்தமாக அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமைந்துள்ளது.
இப் புதிய தேர்தல் முறைமையில் தொகுதிகள் குறைக்கப்பட்டு ஒரு தேர்தல் தொகுதியாக கொண்டுவரப்படும் போது தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழந்து போகக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
இது சம்பந்தமாக தீர்க்கமான முடிவினை நாம் இப்போது கூற முடியாதுள்ளது.
அந்த வகையில் புதிய தேர்தல் முறைமை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வரும் போது அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் எமது கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் இது சம்பந்தமாக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.