பூனைக்குட்டியெனக் கூறி புலிக்குட்டியை வளர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது
தமிழ் பேசும் மக்களை சிறுபான்மை இனத்தவராக நாம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்திற்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், 20ஆவது திருத்தச்சட்டம் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் திட்டமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளுடன் இணங்கிய விடயமொன்று அமைச்சரவையில் சமர்ப்பித்த விடயம் ஒன்று வர்த்தமானியில் வெளியிட்ட விடயம் ஒன்று எல்லாமே ஒன்றுக்கொன்று முரனானது. செல்லப் பிராணியாக பூனைக் குட்டியொன்றை வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், புலிக் குட்டியை வளர்க்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது போன்றே தெரிகின்றது. அந்தப் புலிக்குட்டி கடையில் எஜமானை விட்டு விட்டு சகலரையும் தின்று விடும் இது போன்றே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியது.
இதனால் 20ஐ பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் தோற்கடிக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது, மக்கள் விடுதலை முன்னணியால் நேற்று பத்தரமுல்லையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் கடந்த காலத்தில் இருந்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், சிறிய கட்சிகளின் கூட்டங்களிலும் ஆழமாக ஆராயப்பட்டது. பிரதான இரு கட்சிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டும் இந்த தேர்தல் திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த சந்தர்ப்பங்களில் தேர்தல் திருத்தம் மிகவும் ஆரோக்கியமானதாகவும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையிலும் அமையும் என இரண்டு பிரதான கட்சிகளும் நம்பிக்கையளித்தன. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் 20வது திருத்தச் சட்டமானது சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை முழுமையாக அழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பூனைக் குட்டியை கொண்டுவருவதாக கூறி இறுதியில் புலிக்குட்டியையே இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. புலிக்குட்டி வளர்த்தால் நாட்டில் பெரிய பிரச்சினைகள் வரும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
அரசாங்கம் தற்போது கொண்டுவரவிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டமானது மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக தடுக்கப்படுகின்றது. இந்த நாட்டில் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ அதே முக்கியத்துவம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களை சிறுபான்மை மக்கள் என அழைப்பதை நாம் ஒரு போதும் விரும்பவில்லை, தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் குரல் கொடுக்கும் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அமையவேண்டும். ஆனால் இப்போது கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக புறக்கணிக்கப்படுகின்றது.
குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் பல பகுதிகளில் இருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறான நிலையில் இந்த முறையின்படி தேர்தல் நடக்குமாயின் கிழக்கு மாகாணம் தவிர்ந்து வேறு எந்தப் பகுதியில் இருந்து அவர்களின் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் போகும். அதேபோலவே தமிழ் மக்களின் நிலைமையும் சிக்கலானதாகவே அமையும்.
வடக்கை தவிர வேறு எந்தப் பகுதியில் இருத்தும் தமிழ் தலைவர்கள் பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்த முடியாமல் போய்விடும். பிரதானமான இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் இருப்பார்கள். ஆகவே கள்ளர்களையும், ஊழல் மோசடிக்கரர்களையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி நாட்டை முழுமையாக சீரழிக்கும் நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனவே இந்த 20 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக இனவாதத்தையும், சர்வாதிகாரத்தையும் பலப்படுத்தவே முயற்சிக்கின்றது.
அதேபோல் பல கட்சி கலாசாரம் எமது நாட்டில் பல காலமாக இருந்து வருகின்றது. பல கட்சி கலாசாரமே நாட்டில் அனைத்து மக்களினதும் பிரதிநிதித்துவத்தை பலபடுத்தும். ஆனால் இன்று சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை முழுமையாக அழித்து இரு கட்சி கலாசாரத்தை கொண்டுவரும் திட்டமே இதுவாகும்.
ஆகவே இந்த 20ஆவது திருடச் சட்டத்தை உடனடியாக வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வாபஸ் பெறவேண்டும். அப்படி இல்லாது பாராளுமன்றத்தில் இந்த திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுமையின் அதை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். எம்முடன் இணைந்து செயற்பட பலர் உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.