உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணைக்கான சட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருவதாகவும், இதில் அனைத்துலக விசாரணையாளர்களுக்கோ சட்டவாளர்களுக்கோ இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். “உள்ளக விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான செயல்முறைகள் அனைத்தும், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக, ஓகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவடையும்.
அனைத்துலக விசாரணைகள் நடத்துவதற்கு இது ஒன்றும் சியராலியோன் அல்ல. நீதித்துறை சுதந்தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே முழுமையான விசாரணைகளும் உள்நாட்டிலேயே இடம்பெறும்.
உள்நாட்டு பொறிமுறை என்றால், அது உள்நாட்டு செயல்முறைகளைக் கொண்டதாகவே இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் உள்நாட்டு விசாரணையில், அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள் பெரும்பான்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.