Breaking News

தமிழக மீனவர்கள் விடுதலை கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தது தொடர்பாக உங்களது கவனத்துக்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 

நாகப்பட்டினத்திலிருந்து இரண்டு மீன்பிடி படகுகளின் மூலம் 17 மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் அவர்களை சனிக்கிழமை (ஜூன் 20-ஆம் திகதி) கைது செய்தனர். 

படகுகள், மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன் பிடித்துவரும் பாக் ஜலசந்திப் பகுதியில் மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில்லை என்ற இலங்கை அரசின் முடிவு, அப்பாவி மீனவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இலங்கையின் வசம் தமிழக மீனவர்களின் 18 படகுகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்ளன. அத்துடன், கடந்த ஜூன் 1-ஆம் திகதி கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும், அவர்களின் 3 படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. 

இலங்கை, தமிழக மீனவர்களிடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 27, மே 12-ஆம் திகதிகளிலும், இந்த ஆண்டு மார்ச் 24-ஆம் திகதியும் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது. 

இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் உருவான இணக்கமான சூழல் இந்த கைது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் 1974, 1976-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தங்கள், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிப் பகுதிகளில் அவர்களுக்குள்ள உரிமைகளை மறுக்கும் வகையில் உள்ளது. 

இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்கவும், ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக ரூ. 1,520 கோடி நிதியுதவி மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக ஆண்டுதோறும் ரூ. 10 கோடி ஆகியவற்றையும் தங்களிடம் 03.06.2014-ஆம் திகதி வழங்கிய மனுவில் கோரியிருந்தேன். 

இலங்கை கடற்படையினரால் இப்போது கைது செய்யப்பட்டுள்ள 17 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 31 தமிழக மீனவர்களையும், இலங்கையிடம் உள்ள 23 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். 

இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இலங்கை அரசின் உயர்நிலை அளவில் இந்தப் பிரச்னையைக் கொண்டுசென்று தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.