40 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்
சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, சிறிலங்காவுக்கு ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கு வரும் போது, இருதுரப்பு உடன்பாடுகளில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திடவுள்ளதுடன், கொழும்பில் புதிய ரஸ்யத் தூதரகத்தையும் திறந்து வைக்கவுள்ளார். ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் 1972ம் ஆண்டு தொடக்கம், 1976ம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள சோவியத் ஒன்றியத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர் என்பதும், சிங்கள மொழியில் தேர்ச்சி பெகற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட நிலையிலேயே ரஸ்ய வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு வரவுள்ளார்.