கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு யாழ், திருமலை இணக்கம்! வன்னி, மட்டு மீண்டும் இழுபறியில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் ஆகியவற்றில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஏனைய மாவட்டங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
த.தே.கூ அங்கத்துவ கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது . இதன்போதே இணக்கம் காணப்பட்டது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்குரிய தயார்ப்படுத்தல்களில் ஈடுபடவுள்ளது. ஒவ்வொரு அங்கத்துவ கட்சிகளுக்கும் எத்தனை ஆசனங்கள் ஒதுக்குவது என்பது குறித்து பல சுற்றுப் பேச்சுக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையிலேயே குறித்த சந்திப்பும் அமைகின்றது. இதன்போது, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 6பேரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் 2 பேரும், ரெலோ மற்றும் புளொட் சார்பில் தலா ஒவ்வொருவருமாக வேட்பாளர்களாக களம் இறங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன்னித் தேர்தல் தொகுதியில் 9பேர் வேட்பாளர்களாக களமிறங்க முடியும்.
ஆனால் அங்கு இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் தலா 3 வேட்பாளர்களையும் புளொட் 2 வேட்பாளர்களையும் நியமிக்க கோருகின்றனர். இதனால் 2வேட்பாளர்கள் மேலதிகமாக உள்ளனர். எனவே வேட்பாளர் பங்கீடு தொடர்பில் மீளவும் பேச்சு நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் ஆசனப்பங்கீடுகளில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இது தொடர்பில் அடுத்தவாரம் கொழும்பில் மீண்டும் சந்தித்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய கலந்துரையாடலின் போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அனைவரும் தெரிவித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.