அரசாங்கம் எம்மை ஏமாற்றுகிறது 20ஐ நிறைவேற்றியே தீரவேண்டும்
தேர்தல் திருத்த யோசனை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது. 20ஆவது திருத்தச்சட்டம் எப்படியேனும் நிறைவேற்றப்படவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தேர்தல் முறை திருத்த யோசனைகளை உள்ளடக்கிய 20ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் தேர்தல் திருத்தச் சட்டயோசனை முன்னெடுப்பதில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் முரண்படுவதன் காரணத்தினால் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும் நடத்த தீர்மானித்திருப்பதாக கட்சிகள் முடிவிடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிக்கையில்,
தேர்தல் திருத்தத்தை முன்னெடுக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தான் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த காலத்தில் அரசாங்கம் எதிர்க்கட்சியுடனும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுடன் பல தடவைகள் கலந்தாலோசித்துள்ளது.
அதேபோல் அமைச்சரவையில் கலந்தாலோசித்து தான் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அரசாங்கத்தின் முழுமையான தலையீட்டுடன் தான் 20ஆவது திருத்தச் சாட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவருவதை அரசாங்கமும் ஏனைய கட்சிகளும் எதிர்க்கின்றன.
20ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவருவதில் எதிர்க்கட்சி எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை. அரசாங்கமே அனைத்து செயற்பாடுகளையும் முன்னேடுத்துவிட்டு இப்போது இந்தத் தேர்தல் திருத்தச் சட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வகையில் அமையவில்லை என்றவுடன் குழப்பியடிக்க பாக்கின்றனர். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் துணை போகின்றன. இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஏனைய கட்சிகள் கைகோத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன.
அவர்களின் அரசியல் பாதை கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் தான் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாது இழுத்தடிப்புகளை மேற்கொள்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறேசெனவின் பிரதான இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டே அனைத்துக் கட்சிகளும் அவருடன் கைகோர்த்தன.
குறிப்பாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றையது 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்ற பிரதான இரண்டு உடன்படிக்கைகளாகும். இதில் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முன்வந்த அனைவரும் இன்று 20 ஐ நிறைவேற்றுவதற்கு பின்வாங்குகின்றனர்.
தமக்கு தேவையான காரியம் முடிவடைந்தவுடன் ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க பிரதமர் முயற்சிக்கின்றார். ஆகவே இதை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். இந்த விடயத்தை நாளை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் நாம் முன்வைப்போம் ஆனால் நாம் விவாதத்தை தடுக்க மாட்டோம். விவாதத்தின் போது அரசாங்கத்திடம் நாம் இந்தக் காரணங்களை வினவுவோம்.
அரசாங்கம் தனது சுயநலத்துக்காக மக்களையும் எங்களையும் ஏமாற்றுகின்றது. இந்த செயற்பாடுகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஏமாற்று வேலைகளை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் எனக் குறிப்பிட்டார்.