மிருசுவில் படுகொலை வழக்கு – உள்ளக விசாரணைக்கு பின்னடைவு
மிருசுவில் படுகொலை வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்நாட்டு நீதிக் கட்டமைப்பு தவறியிருக்கிறது. அல்லது அவர்களைத் தப்பிக்க இடமளித்திருக்கிறது. இந்தநிலையில், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணை நியாயம் வழங்கும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?
மிருசுவிலில், தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்து, மலசலகூடக் குழிக்குள் போட்டு மூடிய வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம், இராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை விதித்துள்ளது.
இந்த படுகொலைகள் இடம்பெற்று 15 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த வியாழக்கிழமை இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரியான சார்ஜன்ட் முதியான்சலாகே சுனில் ரத்நாயக்க இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 2ஆம் லெப். சேனக முனசிங்க, புஸ்ப சமன் குமார, ஜெயரத்ன, காமினி முனசிங்க ஆகிய நான்கு இராணுவத்தினர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், கருத்து வெளியிட்டுள்ள மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்ன, இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உள்நாட்டிலேயே விசாரிக்கும் நம்பகமான நீதிக் கட்டமைப்பு சிறிலங்காயில் உள்ளது என்பது உறுதியாகியிருப்பதாக கூறியிருந்தார்.
அதுபோலவே, உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பு முறையாகச் செயற்பட்டுள்ளது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இந்த தீர்ப்பு என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவும் கூறியிருக்கிறார்.
தற்போதைய நிலையில் இது முக்கியமானதொரு கருத்தாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால், இந்த தீர்ப்பு அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் வெளியிடப்பட்ட ஒன்றா என்ற கேள்விகள் எழுப்பப்படக் கூடும்.
ஏனென்றால், இப்போது இறுதிக்கட்டப் போரில் நடந்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு, நம்பகமான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படும் காலமாகும். வரும் செப்ரெம்பர் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் என்ற வலுவான எதிர்பார்ப்பு உள்ளது. இந்தநிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம், எந்த நம்பகமான விசாரணையையும் முன்னெடுக்காத நிலையில், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்தது.
ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்சி மாற்றத்தையடுத்து, புதிய அரசாங்கம் உள்நாட்டிலேயே நம்பகமான விசாரணையை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதியின் அடிப்படையில் தான், கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய ஐ.நாவின் விசாரணை அறிக்கை, வரும் செப்ரெம்பர் மாதம் வரை தாமதிக்கப்பட்டுள்ளது.
நம்பகமான உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக வாக்குறுதி கொடுத்திருந்த புதிய அரசாங்கம், அதனை இன்னமும் செயற்படுத்தவில்லை. முதலில் மே மாதம், உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று கூறியது. பின்னர் ஜூன் இறுதி என்று கூறப்பட்டது. ஓகஸ்ட் என்றும் கூறப்பட்டது.
இப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதால், உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும், செப்ரெம்பரில், ஜெனிவா அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக, அந்த உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டு விடும் என்றும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.
இந்த உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கு தமிழர்கள் தரப்பில் கடுமையான அதிருப்தியும், ஏமாற்றமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விசாரணை நம்பகமானதாக அமையாது, தமிழர்களுக்கு நியாயம் வழங்குவதாக இருக்காது என்ற அவநம்பிக்கை தமிழர்களிடம் வலுவாக இருக்கிறது.
இதற்குக் காரணம், கடந்த காலங்களில், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அநீதிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் சரியான முறையில் நீதி வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்தகால கசப்பான பாடங்களின் அடிப்படையில் தான், தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டில் நியாயம் கிடைக்காது என்றும், சர்வதேச விசாரணை மூலமே அது சாத்தியம் என்றும் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கட்டத்தில் தான், மிருசுவில் படுகொலைகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில் ஒரு இராணுவ அதிகாரிக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனைத் தீர்ப்பை வைத்து தான், மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னவின் கருத்து வெளியாகியிருக்கிறது.
இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டுக்குள் பலம்வாய்ந்த கட்டமைப்பொன்று இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியதன் அடிப்படையே, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மீதான நம்பகத்தன்மையை வலியுறுத்துவதற்காகத் தான்.
ஆனால், மிருசுவில் படுகொலை வழக்கில், 15 ஆண்டுகள் கழித்தே நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு தமிழ்மக்களின் படுகொலைகளுக்கு அதுவும், 5 வயதுக் குழந்தை உள்ளிட்டோரின் கொடூரமான கொலைகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 15 ஆண்டுகள் சென்றிருக்கின்றன.
அடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் நான்கு இராணுவ அதிகாரிகள் போதிய சாட்சியங்கள் இல்லாமையால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் நம்பகமான விசாரணைக் கட்டமைப்பு உள்ளதாக, பெருமையுடன் கூறியிருக்கும், மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னவுக்கு, குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில், ஒரே ஒரு இராணுவ அதிகாரிக்கு மட்டுமே, மரண தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு அது பலவீனமானதாக இருக்கிறது என்ற உண்மை தெரியாமல் போயிருக்கிறது.
சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்ட நான்கு இராணுவத்தினருக்கும் எதிராக போதிய சான்றுகளை சமரப்பிக்கத் தவறியிருக்கிறது. அதனால் தான் மேல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது ஒன்றும், சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அல்ல. சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் என்றால், எட்டுப் பேரையும், ஒரே ஒரு இராணுவ அதிகாரியே படுகொலை செய்திருப்பார் என்று கருத முடியும். ஆனால், ஏற்கனவே கொன்று அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவரின் சடலத்தை, அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதற்காக, எட்டுப் பேரும் குரல் வளையை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
எட்டுப் பேரினதும், குரல் வளையை கத்தியால் அறுத்துக் கொல்லும் காரியத்தை, ஒரே ஒரு இராணுவ அதிகாரியால் ஒருபோதும் நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியுடன் இணைந்து வேறும் சில படையினர் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும்.
படுகொலைகளை நேரில் கண்ட- காயத்துடன் உயிர்தப்பிய சாட்சியான பொன்னுத்துரை மகேஸ்வரன், இந்தப் படுகொலையில் பல படையினர் தொடர்புபட்டிருந்ததை உறுதி செய்திருந்தார். அவ்வாறு, இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்று சட்டமா அதிபரால் குற்றம்சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று தீர்மானிக்கப்பட்டது, போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படாததாலேயேயாகும். சட்டமா அதிபர் திணைக்களம் வலுவான சான்றுகளை சமர்ப்பிக்காதத்தாலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்தப் படுகொலைகள் ஒரு கூட்டுச்செயல் என்ற வகையில், முழுமையான நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது உறுதி.
இந்தக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்காமல் போனமைக்கு உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பின் குறைபாடுகளையே வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்ன, ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை மட்டும் வைத்துக் கொண்டு உள்நாட்டு விசாரணை கட்டமைப்பை வலுவானதாக இருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையானது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு, ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கம் தனது உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பின் மீதான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் இந்த தீர்ப்பின் ஊடாக, உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், மிருசுவில் படுகொலை வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த இந்த உள்நாட்டு நீதிக் கட்டமைப்பு தவறியிருக்கிறது அல்லது அவர்களைத் தப்பிக்க இடமளித்திருக்கிறது. இந்தநிலையில், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணைக் குழு நியாயம் வழங்கும் என்று தமிழர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?