ஆப்கான் நாடாளுமன்றத்தின் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாலிபான் தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்திய திவீரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஆப்கான் தலைநகர் காபூலில், இன்று நாடாளுமன்ற அவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நாடாளுமன்றத்தின் வெளியே தாலிபான் திவீரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 5 பெண்கள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதற்றமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்ததால் அவை முழுவதும் கரும்புகை சூழந்திருந்தது.
ஆப்கான் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலால் அவைக்குள் நிலவிய பதற்றமான சூழ்நிலையை, நாடாளுமன்ற அவை கூட்டத்தின் செய்தியை சேகரித்த உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
முன்னதாக இன்று காலை நடந்துக்கொண்டிருந்த கீழவை கூட்டத்தின் போது முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதனால் அங்கு இருந்த உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆப்கான் நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சரை அறிமுகப்படுத்தும் நிகழ்வை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.