20 ஐ நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதி
19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியோர் 20 ஆவது திருத்தத்தைப் பிற்போட முனைவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆகவே, 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவா? இல்லையா? என்பதனை பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் உடனடியாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.
19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழைத்ததை போன்று 20 ஆவது திருத்ததை நிறைவேற்றவும் 225 உறுப்பினர்களும் ஆதரவு நல்க வேண்டும். இல்லையேல் எதிர்கால சந்ததியினரின் சாபக்கேட்டிற்கு உள்ளாக வேண்டியேற்படும் எனவும் எவர் குறிப்பிட்டார்.
மேலும் சிறுப்பான்மையினத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தொனிப்பொருளில் நேற்று விகாரமஹா தேவி புங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றுகையில்
பிரித்தானிய ஆட்சியின் போது நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதனூடாக தென்பகுதியில் இருந்து மாத்திரமே ஒரு இலங்கையர் தெரிவு செய்யப்பட்டார். அதன் போது 50 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் படிப்படிப்படியாக உறுப்பினர் தொகை அதிகரிக்கப்பட்டது.
தற்போதைய முறைமையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையை முழுமையாக மாற்றவேண்டும். பல்வேறு சதித்திட்டங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்பிரகாரம் 19 ஆவது திருத்ததை நிறைவேற்றியோர் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆர்வம் காட்டுவது குறைவாகவே உள்ளது.
தற்போதைய விருப்பு வாக்கு முறையினூடாக முதலாளிகளுக்கும் பணவசதி படைத்தோருக்குமே முதலிடம் கிடைக்கிறது. விவசாயிகளோ தொழிற்சங்க தலைவர்களோ சாதாரண மனிதர்களோ பாராளுமன்றத்திற்கு வருகை தரமுடியாத நிலைமை தற்போது காணப்படுகிறது. இந்த முறைமையை இப்படியே விட்டுவிட்டால் பணவசதி படைத்தோரின் களமாக பாரளுமன்றம் மாறிவிடும்.
இந்த தேர்தல் முறைமையினால் வெற்றி பெறுவதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடவேண்டடியுள்ளது. ஆகவே குறித்த முறைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும். இல்லையேல் எதிர்கால சந்ததியினரின் சாபக்கேட்டுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பின் போது நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க வேண்டும். இந்த விடயத்தில் எந்தவொரு வாக்குவாதமும் இல்லை.
20 ஆவது திருத்தத்தை பிற்போட முனைவது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக காலைவார முனைபவர்கள் யார் என்பதனை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு எதிராக காலைவார முயன்றதனை போன்று 20 ஆவது திருத்தத்திற்கு எதிராகவும் காலைவாருவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இந்நிலையி்ல் 19 ஆவது திருத்ததை நிறைவேற்றியதனை போன்று 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றி நல்லதொரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.
ஆகவே 20 ஆவது திருத்ததிற்கு ஆதரவா இல்லையா என்பதனை பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் உடனடியாகதெளிவுப்படுத்த வேண்டும். 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியதனை போன்று 20 ஆவது திருத்ததையும் நிறைவேற்றுவதற்கு பிரதமர் ,எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
உண்மை எந்ததருணத்திலும் அமைதியாகவே பயணிக்கும் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததை வெற்றிக்கொண்டு புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவோம் என்றார்.