20இன் ஊடாக நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துங்கள்! ஜனாதிபதியிடம் மூன் வலியுறுத்தல்
இலங்கை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாத்து அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம், ஐக்கியம் என்பவற்றை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று வியாழக்கிழமை மாலை தொலைபேசியில் உரையாடிய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கனையும் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்பிலும் பான் கீ மூன் பாராட்டு வெளியிட்டுள்ளார்.
சமாதானத்தை ஏற்படுத்தவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று அரசியலமைப்பின் 20ஆ வது திருத்தச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தான் நம்புவதாகவும் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமானது நாட்டில் ஜனநாயகத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் உருவாக்கும் என்று தான் நம்புவதாகவும் பான் கீ மூன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தனது எதிர்பார்ப்பு என பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சிறிசேன பான் கீ மூனிடம் கூறியுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கத்தை நிறுவிவிட்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சிறிசேன ஐ.நா. செயலரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறிய பான் கீ மூன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.