20ஆவது திருத்தம் இழுத்தடிப்பு! மகிந்த அணியே காரணம்
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ஆதரவாளர்கள் சிலர் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இதனாலேயே 20ஐ நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
"ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தேர்தல் முறைமையானது மக்களின் சிவில் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். இதனை நிறைவேற்றுவது தொடர்பில் பல கட்சிகள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. அந்தவகையில் நாமும் இதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளோம்.
20 தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதன்படி இப்பரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், மஹிந்த ஆதரவாளர்கள் இதனை நிறைவேற்ற முட்டுக் கட்டையாக விளங்குகின்றனர். தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ஆதரவாளர்கள் சிலர் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாது ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 20 ஐ நிறைவேற்ற வேண்டுமாயின் இலகுவில் நிறைவேற்றலாம். ஆனாலும், அவர்கள் தங்களது அரசியல் இலாபங்களுக்காக இழுத்தடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.