"வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை"
ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களை அழைப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லையென இலங்கையின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தன்னார்வத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃப்ரெல் அழைப்பு விடுத்திருந்தது. உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது தமக்கு நம்பிக்கை இருந்தாலும், தேர்தல் மற்றும் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைத் தாங்கள் அழைத்துள்ளதாக பஃப்ரெல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
எதிர்வரும் வியாழக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுச் செயலர்களின் கூட்டத்தை தேர்தல் ஆணையாளர் அழைத்துள்ளார் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பிறகே இது குறித்து முடிவெடுக்கப்படுமென்றும் மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எம் எம் முஹமட் தெரிவித்தார்.
இலங்கையின் சட்டத்தில் தேர்தல் காலத்தில் வெளிநாட்டு பார்வையாளர்களை அழைக்க வேண்டுமென இல்லையென்றாலும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே முன்னர் அவர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து தெளிவான புரிதலைக் கொண்டுள்ள ஆசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையே தாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பார்வையாளர்களாக அழைத்துள்ளதாக பஃப்ரெல் கூறுகிறது.