Breaking News

மஹிந்த மீது மற்றுமொரு குற்றச்சாட்டு! - 'சில்' உடை பகிர்ந்தளிக்க 6 ஆயிரம் லட்சம் ரூபா எடுத்தாராம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விகாரைகளில் 'சில்' உடை பகிர்ந்தளிக்க 6 ஆயிரம் இலட்சம் ரூபா எடுத்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில்தான் இந்தப் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டிய பெருந்தோட்டத்துறை அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, மஹிந்தவுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றசாட்டுகளை விசாரிக்க நீதிமன்றங்களும் போதுமானவையல்ல; நீதிபதிகளும் போதுமான அளவில் இல்லை என்றும் தெரிவித்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது, அவர் அஞ்சவுமில்லை; ஒழியவுமில்லை; பழிவாங்குகிறார்கள் என்று கூறவுமில்லை. நீதிமன்றத்துக்குச் சென்று கூண்டில் நின்று சாட்சியமளித்தார். 

ஆனால், மஹிந்தவோ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் நாடுமுழுவதுமுள்ள விகாரைகளுக்குச் சென்று 'பழிவாங்குகிறார்கள்... பழிவாங்குகிறார்கள் என்று கூறுகின்றார் என்றும் அவர் கூறினார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுக்காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல.