ஒரு மில்லியன் தமிழர்களில் நீங்களும் ஒருவரா?
மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக்கு கோரும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்தினை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள வேட்டையிலேயே ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் மக்கள் தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம்.
கையெழுத்து இயக்கத்தில் செந்தமிழன் சீமான் இணைவு
இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் அமைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இணைத்துள்ளார்.
தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு பாரப்படுத்தியோ, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவவோ, ஐக்கிய நாடுகள் அவையினை வலியுறுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் இயக்கம் உலகெங்கும் முனைப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.
இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டில் இக்கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவரும் நிலையில் தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அம்மையார் அவர்களது தலைமையில் தோழமை மையத்தினர், நாம் தமிழர் கட்சித்தலைவர் தோழர் சீமான் அவர்களை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்து இயக்கத்திற்கு நாம் தமிழர் கட்சித்தலைவர் தோழர் சீமான் அவர்கள் தனது ஆதரவினை தெரிவித்து படிவத்தில் கையெழுத்திட்டதோடு, நாம் தமிழர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் இராவணன் மற்றும் நாம் தமிழர் கட்சித் தோழர்கள் பலர் கையெழுத்திட்டனர்.
இக்கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பாக தமிழகமெங்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மூலம் பொதுமக்களிடம் கையெழுத்தினை திரட்டி,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அம்மையாரிடம் ஒப்படைப்பதாக தோழர் சீமான் தெரிவித்துள்ளார் என தோழமை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் தோழமை மையத்தினருடன் ஊடகவியலாளர் தோழர் T.S.S மணி, ஊடகவியலாளர் எட்வின் ஆகியோரும் பங்கேற்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.