அன்று வெள்ளை வேன் செய்ததை இன்று வெள்ளை பேனா செய்கின்றது - டிலான் பெரேரா
பிரதமர் பதவி வழங்கப்படாமையின் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்து ஜனாதிபதியானார். தற்போது மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் பதவியை கேட்டு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதனை மனதில் கொண்டு அனைவரும் செயற்படவேண் டும் என்று அமைச்சர் பதவியை இராஜி னாமா செய்த டிலான் பெரேரா தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் வெள்ளை வேனில் கடத்தல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கத்தில் வெள்ளை பேனாவைக் கொண்டு அரசியல் எதிராளிகளை அடக்குகின்றனர். பொலிஸ் மா அதிபருக்கு மேல் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். எனவே இவ்வாறான அரசில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு பிரதமராகவேண்டும் என்று தீர்மானித்தால் அதற்கு கட்சியில் எந்தத் தடையும் இல்லை. எவ்வாறாவது எதிர்வரும் தேர்தலில் மஹிந்த - மைத்திரி் அணிகளை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை உருவாக்கியே தீருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிலான் பெரெரா உள்ளிட்ட நால்வர் நேற்று தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர். அது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்ங அலுவலக்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே டிலான் பெரெரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டிலான் பெரெரா மேலும் குறிப்பிடுகையில்
நாங்கள் ஏன் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்கின்றோம் என்ற காரணங்களை கூறிவிட்டோம். ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவிட்டோம். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மைத்திரி்பால சிறிசேன தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியபோது எவ்வாறான வேதனையை அனுபவித்தாரோ அதேபோன்ற வேதனையை நாங்களும் அனுபவிக்கின்றோம். எனவே எமது தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என்று நம்புகின்றோம்.
நிதி புலனாய்வு விசாரணைப் பிரிவை பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் போன்று செயற்படுகின்றார். அன்று வௌ்ளைவானில் கடத்தல் இடம்பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கத்தில் வௌ்ளை பேனாவைக் கொண்டு அரசியல் எதிராளிகளை அடக்குகின்றனர். தொடர்ந்தும் இவற்றைக் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.
எமது நாட்டின் பிரதமர் எமது நாட்டின் நீதித்துறையை விமர்சித்து பொதுநலவாயத்துக்கு செல்லப்போவதாக கூறுகின்றார். தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக இன்னும் ரணில் நினைக்கிறாரோ தெரியவில்லை. இவ்வாறு செய்வதற்கு இடமளிக்க முடியாது. பிரதமர் வாய் மூலம் நீதிமன்றத்தை அச்சுறுத்தும்போது வடக்கில் நீதிமன்றத்தின் மீது கற்களை கொண்டு தாக்கப்படுகின்றது. நாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு இன்று எடுத்த தீர்மானம் சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வடக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தார். ஆனால் இன்று தெற்கு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல்களை பிற்போடும் தனது வழமையான செயற்பாட்டை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் தேசிய தலைவராக மக்களின் மனதில் இடம்பிடித்தவர். அவர் மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு பிரதமராகவேண்டும் என்று தீர்மானித்தால் அதற்கு கட்சியில் எந்தத் தடையும் இல்லை.
எவ்வாறாவது எதிர்வரும் தேர்தலில் மஹிந்த - மைத்திரி் அணிகளை ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்கி சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை உருவாக்கியே தீருவோம். பிரதமர் பதவி வழங்கப்படாமையின் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதியானார். தற்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை கேட்டு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதனை மனதில்கொண்டு அனைவரும் செயற்படவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ இதுவரை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை என்று நம்புகின்றோம்.
அமைச்சர் சஜித் பிரேமதாச சிறந்த தலைவர். அவர் என்னை சிறப்பாக நடத்தினார். தேசிய அரசாங்கத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் சஜித்திடம் ரணில் விக்ரமசிங்க கற்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நடைபெறும் கூட்டங்களுக்கு கட்சியின் மத்திய குழு ஆதரவு வழங்கினால் செல்வோம். அதாவது ரணிலுக்கு எதிராக எங்கும் கூட்டம் நடந்தாலும் செல்வோம். அத்துடன் நாங்களும் கூட்டங்களை ஏற்பாடு செய்வோம். ரணில் விக்ரமசிங்க தற்போது விமல் வீரவங்ச போன்று சத்தமாக உரையாற்றுகின்றார். பிரபா கணேசனை வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு கூறுகின்றார் .
இதேவேளை சுதந்திரக் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு கட்சியின் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாங்கள் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு செல்லும் தீர்மானத்தை எடுத்தமை தொடர்பில் நாங்கள் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.
அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிடுகையில் இந்த அரசாங்கம் தலதா மாளிகையின் நிலமேவை விசாரிக்கின்றது. விஹாரைகளுக்கு நாங்கள் உதவி செய்யும்போது அவை தொடர்பில் கணக்கு விபரங்களை கோருவதில்லை.இதுதான் வழமையாகும். நிலமே விசாரிக்கப்பட்டமையினால் அஸ்கிரிய பீடாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி அசௌகரியத்துக்கு உள்ளாகினார். மேலும் வடக்கில் நீதிமன்ற உத்தரவை முதலமைச்சரே மீறுகின்ற நிலைமை காணப்படுகின்றது என்றார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் நேற்று அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சி.பி. ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.