கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள எமது காணிகளை மீட்டுத்தாருங்கள்! சிறிதரனிடம் மக்கள் வேண்டுகோள்
யாழ். மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் 25 ஏக்கர் தோட்டக் காணிகளை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் மண்டைதீவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சென்றிருந்த போதே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் வட மாகாணத்தில் படையினர் ஆக்கிரமித்திருக்கும் மக்களின் காணிகளை படிப்படியாக விடுவித்து வருகின்றது. இந்நிலையில் மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மண்டைதீவு முத்துமாரி அம்மன் கோயிலை அண்டிய பகுதியில் கடற்கரைக்கு அண்மையாக பொதுமக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் செம்பாட்டு தோட்டக் காணிகளும், 7 ஏக்கர் கடற்கரை காணிகளுமாக பொதுமக்களின் 25 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியை சுவீகரிப்பதற்கான பிரிவு 2 பிரசுரம் வெளியாகியிருந்தது.
இதையடுத்து இந்த காணிகளை தம்மிடமே தருமாறு கோரி 20 காணி உரிமையாளர்கள் கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலருக்கு கடிதங்களுடன் தமது காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் பிரதிகளையும் இணைத்து அனுப்பியிருந்தனர். எனினும் இதற்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து கடற்படையிடமிருந்து எமது காணிகளை விடுவித்துத் தாருங்கள் என மக்கள் கோரியுள்ளனர்.
அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காணி ஆக்கிரமிப்பு விடயத்தில் மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் எந்த காரணத்துக்காகவும் காணிகளை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மக்களிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.