Breaking News

ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தால் தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை, திருப்தி

இலங்கை ஜனாதிபதியுடன் பேசியது நம்பிக்கையும் திருப்தியும் அளித்ததாக இலங்கையில் இருந்து மதுரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8ம் திகதி மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் தலைமையில் ஜேசுராஜா, எமரிட், சட்ட ஆலோசகர் விஜயகுமார் உள்பட 6 பேர் இலங்கை சென்றனர். 

அவர்கள் இலங்கை மீன்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர். அடுத்து இலங்கை அமைச்சர் சுவாமிநாதன், இந்திய- இலங்கை மீனவர் நல அமைப்பின் தலைவர் அந்தோணிமுத்து ஆகியோருடன் ஜனாதிபதி சிறிசேனாவை சந்தித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

பின்னர் விமானம் மூலம்; மதுரை வந்த தேவதாஸ், ஜேசுராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.தமிழக மீனவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை, இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவிடம் நேரில் தெரிவித்தோம். எங்களது பிரச்சினைகளை அவர் கனிவுடன் கேட்டார். 

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.