சமூக கட்டமைப்பின் சீர்குலைவே யாழ்.வன்முறைகளுக்கு மூலகாரணம் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்
புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப் பட்டதற்கும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும், போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பாரம்பரிய சமூக நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறிவே காரணம் என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு, யாழ்.பல்கலைக்கழக உளநலத்துறைப் பேராசிரியரான மருத்துவ கலாநிதி தயா சோமசுந்தரம் கருத்து வெளியிடுகையில்,
“பாரம்பரியமான கட்டமைப்புகள், விதிமுறைகள், ஆதரவு மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையில் ஏற்பட்ட உடைவே, இவற்றுக்கு மூல காரணம். பாரம்பரியமான குடும்ப ரீதியான மற்றும் சமூக ஆதரவு கட்டுப்பாட்டு பொறிமுறை இரு இருக்காது. அது 30 ஆண்டுகாலப் போரினால் அழிந்து விட்டது.
போருக்குப் பின்னர், மனிதவள அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்படவில்லை. இளைஞர்கள் தமக்கு எதிர்காலம் இல்லை என்று வழிதவறிப் போகிறார்கள். வெளிநாட்டு வருமானத்தில் வாழ்பவர்கள், சோம்பேறி வாழ்க்கையை வாழ்வதுடன், குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் அவர்கள் மற்றவர்களுக்குத் தவறான முன்மாதிரிகளாகவும் மாறுகின்றனர். சமூக, நிர்வாக, கல்விக் கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புவதும், முழுமையான இலக்குகளை அடைவதற்கான குழுச் செயற்பாடுகளை ஊக்குவித்தலுமே இதற்கான தீர்வாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.