இலங்கையுடன் புதிய உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறது ரஷ்யா
பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், இலங்கைக்கும் ரஷ்யாவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும், புதிய உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத் திடவுள்ளன.
கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சான்டர் ஏ கர்சாவா சந்தித்துப் பேசிய போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அனைத்துலகப் போக்கின் முன்னேற்றங்கள் எத்தகையதாக இருந்தாலும், இலங்கையும் ரஷ்யாவும், தமது வலுவான நட்புறவையும், இருதரப்பு நெருக்கத்தையும் தொடர்ந்து பேண வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்பு, சக்தி, வர்த்தகம், விவசாயம், கல்வி, நீதித்துறைகளில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும், உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளைக் கையெழுத்திட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதைவிட, மேலதிகமாக மூன்று இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு ரஷ்யாவில் அணுசக்தி பௌதிகவியல் துறையில் கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் வழங்கவும் ரஷ்யா முன்வந்துள்ளது.
அத்துடன், ரஷ்யா வழங்கிய கடன் திட்டத்தில், இலங்கை விமானப்படைக்கான கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டது போக மீதமுள்ள 100 மில்லியன் டொலரையும், இலங்கை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், ரஷ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.