மண்டைதீவில் உல்லாச விடுதி நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம் - ஐங்கரநேசன்
மண்டைதீவில் 37மாடிகளைக் கொண்ட உல்லாசப் பயணிகள் விடுதியை நிர்மாணிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை வடக்கு மாகாணப் பணிப்பாளரிடம் அனுமதி பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. உல்லாச விடுதியை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை இடை நிறுத்தியுள்ளதாக வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு எட்டாம் வட்டமாரக் கடற்கரையோரமாக இருபத்தி ஐந்து ஹெக்டெயர் அரச காணியில் 37 மாடிகளைக் கொண்ட இந்த விடுதியை அமைக்கும் ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக மண்டைதீவு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கும் வடக்கு மாகாண விவசாய சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்தார்கள்.
அத்துடன் வடக்கு மாகாண சபை சுற்றாடல்துறை அபிவிருத்திக்குத் தடையாக இல்லை எனவும் ஆனால் சுற்றாடல்துறை எமது மக்களின் பண்பாட்டுச் சூழல், இயற்கைச் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ் நிர்மாணப்பணியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.