Breaking News

புதிய அரசாங்கம் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சி! ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

இலங்கையின் புதிய அரசாங்கம் அண்மையில் வடபகுதி தமிழர்களை முடக்கும் வகையில் இரு நீர்ப்பாசன திட்டங்களை முன்மொழிந்து, அதன் ஊடாக வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.


இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 27ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற வட மாகாணத்திற்கான நீர்ப்பாசனம் தொடர்பான கலந்துரையாடலில் மகாவலி கங்கையை வெலிஓயாவுக்கு திருப்புவது தொடர்பாகவும். மல்வத்து ஓயா நீரை மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு விடாமல் அனுராதபுரத்தில் அணைகட்டுவதும், என இரு திட்டங்கள் அதில் உள்ளடங்கியிருக்கின்றன.

முன்னதாக மகாவலி கங்கை வடக்கிற்கு வராமலேயே மகாவலி எல் வலயத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலும் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

இதனாலேயே வெலிஓயா என்ற தனியான சிங்கள பிரதேச செயலர், பிரிவு அந்தப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் மகாவலி கங்கையை கொண்டுவந்தால் அந்தப் பகுதியில் தமிழர்களின் அடிப்படை வாழ்வாதார தொழிலான விவசாயத்திற்கு அடிப்படையான நிலங்கள் முழுமையாக கபளீகரம் செய்யப்படும்.

மேலும் மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு 3 போகத்திற்குமான நீர், வழங்குவதாக கூறி கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடம் அனுமதி பெற்றிருக்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறு மல்வத்து ஓயா நீர் அனுராதபுரத்தில் மறிக்கப்பட்டால் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு ஒரு போகத்திற்கும் கூட நீர் கிடைக்காது என்பதுடன், வவுனியா மாவட்டத்தில் 2ஆயிரம் ஏக்கர் தமிழர்களுடைய நிலம், அபகரிக்கப்படும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில் நீரை பயன்படுத்தி வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவவும், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவும் முயற்சிக்கப்படுகின்றது. ஆனால் இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்பாக வடக்கு மாகாணசபைக்கு எவ்விதமான அறிவித்தலகளும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நாம் முதலமைச்சர் ஊடாக, ஜனாதிபதிக்கு எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.