தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அனுராதா மிட்டல்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீதித்துறை சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஒக்லண்ட் நிறுவனம் என்ற கலிபோர்னியாவைத் தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டல் தெரிவித்துள்ளார்.
இந்த மையத்தினால், தயாரிக்கப்பட்ட இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளை விபரிக்கும், “போரின் நீண்ட நிழல்“ என்ற அறிக்கையைத் தயாரித்த அனுராதா மிட்டல், இந்த அறிக்கை வெளியீட்டை முன்னிட்டு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் கடந்த கால நடவடிக்கைகளின் அடிப்படையில், எந்த ஒரு தீர்க்கமான நடவடிக்கைக்கும் அனைத்துலக அழுத்தம் அவசியமானது. எனவே அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் தமது பூகோள நலன்களை மையப்படுத்தி செயற்படாமல், இலங்கை தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் நம்பகத் தன்மையான போர்க்குற்ற விசாரணை உறுதிப்பாடுகளை சந்தேகத்துக்குட்படுத்துகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.