Breaking News

ரணிலும் மகிந்த பாதையில்!

பாகிஸ்தானுக்கான தூதுவராக, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் தயா ரத்நாயக்க அண்மையில் ஓய்வுபெற்றிருந்தார்.கடந்த ஜனாதிபதி தேர்தலில், மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அலரி மாளிகையில் தீட்டப்பட்ட சதித் திட்டத்துக்கு அவர் உடன்பட மறுத்ததாக, தற்போதைய அரசாங்கம் கூறியிருந்த்து.

இந்தநிலையில், ஜெனரல் தயா ரத்நாயக்கவை, பாகிஸ்தானுக்கான அடுத்த தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. தற்போது, பாகிஸ்தானுக்கான தூதுவராக பணியாற்றும், இலங்கையின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் ஜெயலத் வீரக்கொடி, விரைவில் அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளார்.

அவர் 2009ம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தானில் பணியாற்றி வருகிறார். அதேவேளை, தற்போது ஆட்சியில் இருக்கும் ஐதேக, முன்னர் வெளிநாட்டுத் தூதுவர் பதவிகள் மற்றும் இராஜதந்திரப் பதவிகளுக்கு படை அதிகாரிகளை நியமிப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.