ஜோன் கெரியிடம் அமெரிக்காவின் உதவியைக் கோரவுள்ளது கூட்டமைப்பு
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இன்று காலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் கொண்ட குழுவினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் அரசியல் செயல்முறைகளை வலுப்படுத்த அமெரிக்க உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்றுகாலையில் நடக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலருடனான சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொள்வார். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, வடக்கு, கிழக்கில் இன்னமும் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட மனிதாபிமான விவகாரங்கள் குறித்தும், ஜோன் கெரியுடனான பேச்சுக்களில் கவனம் செலுத்தும்.
19வது திருத்தச்சட்டத்தின் வெற்றியின் பின்னணியில் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க அரசாங்கம் உற்சாகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதுபோலவே, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக அமெரிக்காவின் ஆதரைவை ஜோன் கெரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும். வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதால், போருக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள எல்லா விவகாரங்கள் குறித்தும் அவரால், விபரமாக எடுத்துக் கூறக் கூடியதாக இருக்கும்.” என்றும் தெரிவித்தார்.