கோத்தாபய மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என மறுப்பு
தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியினர் முறைப்பாடு செய்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது போல் தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜே.வி.பியினர் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அம்பாறை முன்னாள் மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ், மற்றும் அம்பாறை நகர சபை தலைவர் இந்திக நலின் ஜயவிக்கிரம ஆகியோருக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு முன்பாக கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, தமது முறைப்பாடு தொடர்பில் பாரபட்சமின்றி விசாரணை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழில் மோசடிகள் குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.