Breaking News

சல்மான் கானுக்காக கவலையில் ஆழ்ந்த இந்தி திரையுலகம்

பிரபல நடிகரான சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை அடுத்து இந்தித் திரையுலகம் கவலையில் ஆழ்ந்துள்ளது.

சல்மான் கானுக்கு இந்த தண்டனை நேற்று முன்தினம் விதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு இரண்டு நாட்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் மும்பை நகரில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தை செலுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் அடிப்படையிலேயே சல்மான் கானுக்கு நேற்று முன்தினம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தனது சாரதியினால் இந்த விபத்து இடம்பெற்றதாக சல்மான் கான் தெரிவித்த போதிலும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் சாரதி ஆசனத்தில் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சல்மான் கான் தப்பித்துச் சென்றதாக அங்கிருந்த ஒருவர் சாட்சியமளித்திருந்தார். இதனடிப்படையில் சாட்சிகளை விசாரணை செய்த நீதிபதி D.W. தேஷ்பாண்டே சல்மான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்தார்.

இதனையிட்டு சல்மான் கான் கண்ணீர் விட்டு அழுததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சல்மான் கான் வீ்ட்டில் நேற்று காலை பொலிவூட் நட்சத்திரங்கள் குவிந்திருந்தனர். ஷாருக் கான் , அமீர் கான் மற்றும் சுனில் ஷெட்டி உட்பட பல நடிகர்கள், நடிகைகள் அங்கு குவிந்திருந்தனர். சல்மான் கான் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நடிக்கும் இரண்டு திரைப்படங்கள் தற்போது அவதான நிலையில் காணப்படுகின்றன.

அந்த இரண்டு திரைப்படங்களின் பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த அப்துல் ரஷீட் சலீம் சல்மான் கான் இந்திய சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். திருமணமாகாத இவர் தொடர்பில் அவரது குடும்பத்தாரும் சமகால நலன் விரும்பிகளும் உயர் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டுள்ள பிணை மீதான விசாரணையை எதிர்பார்த்துள்ளனர்.