மக்களின சாதாரண போராட்டத்தை ஈழப்போராக்கும் மகிந்த! சம்பிக்க குற்றச்சாட்டு
புலிப்பூச்சாண்டி காட்டி நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார். மக்களின் சாதாரண போராட்டத்தை மீண்டுமொரு ஈழப் போராட்டமாக சித்திரித்து நாட்டை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளகிறார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கில் மீண்டும் பிரிவினைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வடக்கிற்கான எரிபொருள் விநியோகத்தை அரசாங்கம் நிறுத்திவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளப்பிவிட்ட புரளிக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
‘வடக்கில் புலிப் பயங்கரவாதம் தலைதூக்கப் போவதில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டுடன் இலங்கையில் அனைத்து புலிகளையும் எமது இராணுவ வீரர்கள் அழித்துவிட்டனர். சர்வதேச நாடுகளில் இருக்கும் புலம்பெயர் புலி அமைப்புகளை இலங்கைக்குள் அனுமதிக்காது கட்டுப்படுத்தியுள்ளோம்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ஒருசிலருக்கு மீண்டும் இனவாதம் மற்றும் பயங்கரவாதம் தேவைப்படுகின்றது. தமது அரசியலை இனவாதத்தினூடாக மட்டுமே கொண்டு செல்ல முடியுமென இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அதை நாம் இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை. வடக்கில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவியின் கொலையை பயங்கரவாதமாக மாற்றி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர். மக்களின் கோபத்தை அரசியல் சூழ்ச்சியாக மாற்றி அதில் ஆட்சியை கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் ஒரு போதும் அது நடைபெறப் போவதில்லை.
கடந்த அரசாங்கத்தில் புலிகளை அழித்ததாக கூறும் இவர்கள் 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு பண உதவிகளை செய்தனர் என்ற குற்றச் சாட்டை இதுவரை யாரும் மறுக்கவில்லை. இரகசிய பொலிஸாரிடமும் இது தொடர்பில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆகவே மஹிந்த அரசாங்கம் புலிகளை பாதுகாத்துள்ளது என்பது உண்மையாகும்.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை புலிகள் கொலைசெய்ய முயற்சித்த போதிலும் அப்போதைய அரசாங்கம் புலிகளுக்கு வாகன உதவிகளை வழங்கியுள்ளது. ஆகவே இவர்கள் யாரும் புலிகளை அழித்ததாக உரிமை கோர முடியாது. எமது இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை மதித்து இந்த நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து காப்பாற்ற வேண்டும். வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்குவதாக பொய்ப்பிரசாரம் மேற்கொண்டு மீண்டும் நாட்டை குழப்ப முயற்சிக்க வேண்டாம்.
மேலும் வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்பகர நிலைமையில் வட மாகாணத்துக்கான எரிபொருள் வழங்குவதை நாம் தடுத்ததாக சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது. வடக்குக்கு தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிபொருள் அனுப்பப்படுகின்றது. வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்பகர சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அத்தோடு வடக்குக்கான எரிபொருளை தடுக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. ஒரு சிலரின் பொய் கருத்துக்களை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்க முயற்சிக்கின்றமை சாத்தியமற்ற தொன்றாகும். மக்களை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.