புலிகள் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது! விஜயகலா
விடுதலைப் புலிகளின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பெண்களும், யுவதிகளும் பாதுகாப்பாக இருந்ததாக பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகிய அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் வந்து வடக்கை கைப்பற்றுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு இருந்தது.
புலிகளின் காலத்தில் பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு பற்றி விபரிக்க முடியாது. இரவு 12 மணி 1 மணிக்கும் வெளியில் செல்ல முடியும். கொலையாளிகள் வருவதில்லை. வெள்ளை வான்கள் வருவதில்லை. வீடுகளில் பிரச்சினைகள் இல்லை. பெண் பிள்ளைகளுக்கும் எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை. பிள்ளைகள் பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு சென்ற வர முடிந்தது. விடுதலைப் புலிகள் இல்லாது போன பின்னரே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அரசாங்கம் படையினரை கொண்டு முன்னர் வடக்கை நிர்வாகம் செய்தது. தற்போது அது காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.