போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை படை அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயசிடம், ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு 3 மணி நேரம் விசாரணைகளை நடத்தியதாக ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த அதிபர் ஆணைக்குழுவுக்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இறுதிப்போர்க் காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்குமாறு பணித்திருந்தார். இதற்கமையவே, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு, தற்போது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இறுதிப்போரில் பங்கெடுத்த இலங்கை படை அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக, டிவிசன்களின் தளபதிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இறுதிப்போரில் 55வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 59வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையிலேயே, அனைத்துலக அளவில் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், இறுதிப்போரில் 57வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயசிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பல முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இவை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இறுதிப்போரில் முக்கிய பங்காற்றிய, போர்க்குற்றவாளியாக குற்றம்சாட்டப்படுகின்ற, முன்னர் 58வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இன்னமும் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராகப் பணியாற்றிய இவர், தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.