மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், இலங்கை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தலைவர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், நீதித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இந்த வாரம் கொழும்பு வந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் உடனடி விளைவாகவே, இவர்கள் கொழும்பு வந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களைக் கண்டறியவும், இலங்கையில் உள்நாட்டு விசாரணைகளுக்கு உதவவும் அமெரிக்கா தயாராக இருப்பதாக, ஜோன் கெரி உறுதியளித்திருந்தார்.
இதற்கமைய, கொழும்பு வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள் குழு, இலங்கையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் மூத்த விசாரணையாளர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது, தற்போது மேற்கொள்ளப்படும் உயர்மட்ட விசாரணைகள் குறித்து கேட்டறிந்துள்ள அமெரிக்க அதிகாரிகள், வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்க8ளக் கண்டறிய உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சொத்துக்கள் பற்றிய பேச்சுக்களின் ஒரு கட்டத்தில், அமெரிக்காவில் இருந்த இலங்கை இராஜதந்திரி ஒருவரின் பங்கு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இராஜதந்திர மரபுகளுக்கு முரணாக அவரால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் கையளிக்கவுள்ளனர்.
அவர் தனது பதவிநலைக்கு அப்பால், தரகுப் பணியில் ஈடுபட்டு பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளது குறித்து, கொழும்பில் அதிகாரிகள் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர். அதேவேளை, முன்னைய அரசாங்கத்தில் சக்திவாய்ந்தவராக விளங்கிய உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் குறித்த விபரங்களையும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு பெற்றுள்ளது.
இவர், லொஸ்ஏஞ்சல்ஸ், ஆலிங்டன், வொசிங்டனில் உள்ள வேர்ஜீனியாவில் தொடர்மாடிகளை கொள்வனவு செய்துள்ளார். அமெரிக்காவில் இலங்கையை ஊக்குவிக்கும் பல திட்டங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய இந்த நபரின் ஏனைய முதலீடுகள் மற்றும் இதற்கான நிதி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.