மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தை வெளியேற சொல்ல முடியாது - யாழ்.அரச அதிபர்
இராணுவத்தினரோடு தான் மக்கள் வாழ வேண்டும் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தை வெளியேற சொல்ல முடியாது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டத்தினை அடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மீள்குடியேறுவதற்கு அனுமதிமக்கப்பட்ட இடங்களில் இராணுவமும் சில இடங்களில் நிலை கொண்டுள்ளதனால் மக்கள் எவ்வாறு அங்கு மீளகுடியேற முடியும். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் மக்களை மீள்குடியேருமாறு கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்காக இராணுவத்தை நாம் வெளியேறுமாறு கூற முடியாது. மக்கள் அங்கு குடியேறினால் தான் நாம் அவர்கள் மீள்குடியேறியதனை உறுதிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா இராணுவத்தரப்பு உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் அடுத்த கட்ட விடுவிப்பு எதுவும் இல்லை எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.