தமிழினத்திற்கு எதிராகச் சதி விலைபேசல் நடந்து விட்டதா?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடபகுதிக்கான வருகையின்போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது தெரியவருகிறது.
தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றில், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கதைக்கமாட்டேன். வட பகுதிக்கு விஜயம் செய்தால் அவரைச் சந்திக்கவும் மாட்டேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் மேற்போந்த செவ்வியால் அரசியல் புலத்திலும் பொதுமக்கள் தரப்பிலும் சலசலப்பு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு ரணிலின் கருத்து ஆச்சரியமாக இருந்தது என்றே கூறவேண்டும். எதற்காக இப்படி ஒரு முடிவு? ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடக்கின் முதலமைச்சர் என்ன கெடுதி செய்து விட்டார்? வடக்கின் முதலமைச்சருடன் கதைக்க மாட்டேன் என்று இந்த நாட்டின் பிரதமர் ஒருவர் கூறுவதென்பது மிகமோசமான சின்னத்தனம். அரசியல் பண்பாட்டுக்குப் புறம்பானது.
முதல்வர் விக்னேஸ்வரன் இந்த நாட்டின் நீதியரசராக இருந்தவர். ஆன்மிகத்தைப் பின்பற்றுகின்றவர். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சரானவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் எச்சந்தர்ப்பத்திலும் விக்னேஸ்வரனை மதிக்கத் தவறியதில்லை. இந்தியப் பிரதமர் மோடியும் முதல்வர் விக்னேஸ்வரனை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
நிலைமை இதுவாக இருக்கும் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலமைச்சர் விக்னேஸ்வர னைச் சந்திக்க மாட்டேன் எனக் கூறுவது பிரதமர் பதவிக்கு அழகன்று. பரந்து பிரிந்த மனப்பக்குவம், அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமை போன்ற உயர்ந்த பண்புகளின் பஞ்சத்தனமே இத்தகைய போக்குகளுக்குக் காரணம் எனலாம்.
எது எப்படியாயினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் முதல்வர் விக்னேஸ்வரனையும் இணைக்கின்ற பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தாக வேண்டும். அதைச் செய்ய முடியாது என்றால்-அந்த முயற்சிக்கு பிரதமர் ரணில் இணங்க மறுத்தால்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பை தவிர்க்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, சிவில் சமூகம் உள்ளிட்ட சமய, பொது அமைப்புகளும் பிரதமர் ரணிலின் சந்திப்பைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கின் முதலமைச்சரை, வடக்கிற்கு வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் சந்திக்க முடியாது என்றால், தமிழ்த் தரப்புகளும் இச்சந்திப்பைத் தவிர்ப்பது எங்களின் ஒற்றுமையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கான வழியாகும்.
இதைவிடுத்து முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் ரணிலைச் சந்திப்போம் என்று கூட்டமைப்போ அல்லது பொது அமைப்புகளோ நினைத்தால், தமிழினத்திற்கு எதிரான சதி வேலைக்கு உடன்போகும் விலைபேசல் நடந்து விட்டது என்றே பொருள்கொள்ள வேண்டும்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்