சுப்பிரமணியன் கருத்துக்கும் பா.ஜ.க.விற்கும் சம்பந்தமில்லை - தமிழிசை
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேன்முறையீடு செய்யாவிட்டால் நான் செய்வேன் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பா.ஜ.க.வின் கருத்து அல்ல, அது சுவாமியின் சொந்தக் கருத்து என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் யூகிக்கிறார்கள். பா.ஜ.க. ஊழல் இல்லாத இயக்கம். வழக்கில் தலையிடும் பழக்கம் எங்களுக்கு இல்லை. இந்த தீர்ப்பு எதிர்பாராத தீர்ப்பு என்பது அனைவரும் அறிந்ததுதான். ஏதாவது ஒரு தண்டனையோ அல்லது கண்டனமோ இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் எதிர்பாராத தீர்ப்பாக அமைந்து விட்டது. ஆனாலும் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதனால்தான் நான் வாழ்த்து சொன்னேன். பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து சொன்னார். இதுதான் அரசியல் நாகரீகம்.
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். விடுதலை ஆனதால் அவருக்கு நிம்மதி கிடைத்துள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல, அந்த நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேன்முறையீடு செய்யாவிட்டால், தான் மேன்முறையீடு செய்யப்போவதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. இதுவரை 40 இலட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் 3 மாதங்கள் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்த உள்ளோம். சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை அந்தத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. . தேர்தல் நேரத்தில் தேசிய தலைமையுடன் இணைந்து அதை தீர்மானித்து முடிவு செய்வோம் என்றார்.