Breaking News

இரவில் நித்திரைகொள்ளும் இடமாக பாராளுமன்றம் மாறிவிட்டது - அனுர குமார

“பாராளுமன்றத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் இரவில் நித்திரை செய்யும் இடமாக மாறியுள்ளது. முக்கியமான திருத்தமொன்றை நிறைவேற்றி முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது” என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

ஜே.வி.பி.. கொழும்பு – கோட்டை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் துண்டுப்பிரசுர விநியோகங்களில் ஈடுபட்டது. “100 நாள் வேலைத்திட்டம் நிறைவு; புதிய அரசியல் பயணத்திற்கு தயாராகுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு கோட்டையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்ததாவது;

“பாராளுமன்றத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் இரவில் நித்திரை செய்யும் இடமாக மாறியுள்ளது. முக்கியமான திருத்தமொன்றை நிறைவேற்றி முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரை உறுதியாகக் கூறப்படவில்லை. அதைக்கூற முடியாதவராக சபாநாயகர் மாறியுள்ளார். தொடர்ந்தும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவினால் இருக்க முடியாது. ஆனாலும் அவர் பிரதமராக இருக்கின்றார். ஏனையோரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒட்சிசனின் ஊடாகவே அவர் பதவி வகிக்கின்றார். தொடர்ந்தும் பிரதமராக இருப்பதற்கு அவருக்கு உரிமையில்லை.”

இவ்வாறு அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மக்களைத் தெளிவூட்டுவதற்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் மற்றுமொரு நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி கிளிநொச்சியிலும் நேற்று முன்னெடுத்தது.