மாறாத முள்ளிவாய்க்கால் சோகம் -சி.சிறிதரன்
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஆறு வருடங்கள் நிறைவடைகின்றன. ஆயினும் அந்தப் பேரவலத்தின் தாக்கங்கள் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மறையவில்லை. குடும்ப உறவினர்களையும் உற்றவர்களையும் இழந்த சோகம் இன்னும் ஆறவில்லை. மாறாத ரணங்களாக அந்த சோகம் இன்னும் அவர்களை வருத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த சோகத்தில் இருந்து சிறிது ஆறுதல் பெறத்தக்க வகையில் அந்த சோக தினங்களை நினைவுகூரவோ அல்லது அப்போது அவலமாக மடிந்து போனவர்களை நினைத்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவோ கடந்த ஐந்து வருடங்களாக முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான அனுமதியை முன்னைய அரசாங்கம் மறுத்திருந்தது.
இறந்தவர்களை நினைவுகூர்ந்து, சமயாசாரப்படி, அவர்களுக்கான கிரியைகளைச் செய்ய முடியாத வகையிலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத வகையிலும் அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய இராணுவத்தினர் கடுமையாக நடந்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தின் இந்தச் செயற்பாடு முள்ளிவாய்க்காலின் சோகத்தை மேலும் மேலும் அதிகரிப்பதற்கே வழியேற்படுத்தியிருக்கின்றது.
யுத்தம் என்றால் இழப்புக்கள் இருக்கத்தான் செய்யும். அதனைத் தவிர்க்க முடியாது. ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது வெறும் யுத்தமல்ல. அங்கு ஓர் இன அழிப்பே நடைபெற்றது என்பதற்குப் பல ஆதாரங்களை, பலரும் முன்வைத்திருக்கின்றார்கள். ஆனால் யுத்தத்தை முன்னின்று நடத்திய அரசாங்கம் அதனை, இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து, அந்த இனத்தை அடக்கியொடுக்கி வைத்திருப்பதற்காக மறைமுகமான நிகழ்ச்சி நிரல்களின் ஊடாக காடையர்களையும் கொள்ளையர்களையும் அவ்வப்போது ஏவிவிட்டு, அந்த மக்கள் மீது பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவ்வாறான தாக்குதல்களை வெறும் வன்செயல்களாகச் சித்ததிரித்து கடந்த காலங்களில் மாறி மாறி பதவியில் இருந்த அரசாங்கங்கள், அவற்றுக்கான பொறுப்புக்களை ஏற்காமல் தப்பித்துக் கொண்டிருந்தன.
அது மட்டுமல்லாமல், கடந்த 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலம் தொடக்கம் அவ்வப்போது தொடர்ச்சியாக இந்த வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. தேர்தல்களின் போதும், வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த வன்முறைகள் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவுடன், அவர்களின் ஆசியுடன் இடம்பெற்று வந்தன. அவற்றில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் உச்சமானது. அந்தக் கலவரங்களைக் கண்டு, உலகமே அஞ்சியொடுங்கியது.
ஆனால், அப்போதைய வன்முறைகளில் ஈடுபட்டிருந்த எவரையுமே இந்த நாட்டின் அரசாங்கங்கள் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. பலருடைய கண்முன்னால் பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயங்கரவாத வன்முறைகள் பற்றியோ, அவற்றில் ஈடுபட்டிருந்தவர்கள் பற்றியோ இந்த நாட்டின் நீதி தேவதையும் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றங்களில் வழுவாத நீதியின் அடையாளச் சின்னமாக வைக்கப்பட்டுள்ள நீதிதேவதைகளின் கண்கள் கறுப்புத் துணியினால் கட்டப்பட்டிருப்பதனால், நீதிமன்றங்களுக்கு இந்த அநியாயங்கள் தெரியவராமல் போய்விட்டதோ என்னவோ தெரியவில்லை.
இத்தகைய இனக்கலவரங்கள் ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அஹிம்சை ரீதியில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மீதும், அவர்களின் பின்னால் அணிதிரண்ட பொதுமக்களின் மீதும் அரச தரப்பு குண்டர்களும், பொலிசாரும் பின்னர் இராணுவத்தினரும் ஆயுதங்களுடன் ஏவிவிடப்பட்டு, அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் இணக்கச் செயற்பாடுகள் என்பவற்றை மேற்கொண்ட போதிலும் தமிழர் தரப்பின் நியாயமான கோரிக்கைகள், வேண்டுதல்கள், என்பன செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போயின. இதனையடுத்து, அரசாங்கங்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை நடவடிக்கைகளும் அஹிம்சை வழியிலான போராட்டங்களும் அதிகார இரும்புக் கரங்கள் கொண்டு அடக்கப்பட்டன.
இதனால் அரச பயங்கரவாதம் எதிர்ப்பார் எவருமின்றி ஆணவத்தோடு தலைவிரித்தாடியது. இதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவ்வப்போது அரங்கேற்றப்பட்ட வன்முறைகளில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காகவுமே ஆயுதப் போராட்டம் தலை தூக்கியது.
ஆனால், அந்த ஆயுதப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதச் செயலாகக் காட்டி, அரசியல் உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக பெரும் எடுப்பில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே இந்த நாட்டில், ஒரு மோசமான யுத்த மோதல்கள் இடம்பெற்றன. ஓர் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினராகிய ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்த சிவில் யுத்தமானது, வெஞ்சினம் கொண்ட இரு வேறு நாடுகளுக்கிடையில் அவற்றின் ஆயுதப்படைகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு மோசமான யுத்தத்தைப் போன்று இடம்பெற்றிருந்தது.
இத்தகைய யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என இலங்கை அரசாங்கம் சித்தரித்து, அதற்கேற்றவாறு சர்வதேச அரங்கில் தனக்கான ஆதரவைத் திரட்டிக்கொண்டது. அப்போது உலக அரங்கில் பயங்கரவாதமும், பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எதிர்ப்பு உணர்வும் மிகத் தீவிரமாக முனைப்புப் பெற்றிருந்தன. இந்தப் பின்னணியில் பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்டிருந்த, விடுதலைப்புலிகளுக்கு எதிரான உணர்வை அதிகப்படுத்தி, அவர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தேவைக்குரிய இராணுவ ரீதியிலான ஆதரவை இலங்கை அரசு, சர்வதேச மட்டத்தில் மிக சாமர்த்தியமாகத் திரட்டிக்கொண்டது.
இந்த ஆதரவுதான், விடுதலைப்புலிகளுக்கு எதிராக, தரை, கடல் மற்றும் வான் வழிகளில் இராணுவ தாக்குதல்களை மிகவும் வலிமையோடு இலங்கை அரச படைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாகியிருந்தன. விடுதலைப்புலிகள் மீது உக்கிர தாக்குதல்களை நடத்திய அரச படைகளுக்கு, விடுதலைப்புலிகளின் இராணுவ இரகசியங்கள், ஊடுருவல் மற்றும் பல்வேறு உளவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கைப் படைகளுக்கு அப்போது கிடைத்திருந்ததும், பேருதவியாக அமைந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சர்வதேசத்தின் ஆதரவு இலங்கை அரச பக்கம் சாய்ந்திருந்தபோதிலும், மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமைகள் மீது பற்றுகொண்ட சில நாடுகளும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் இராணுவத்தினர் மிதமிஞ்சிய இராணுவ பலத்தைப் பிரயோகித்ததைக் கண்டிக்கவே செய்திருந்தன. இருப்பினும் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போக்கின் அப்போதைய ஒழுங்கும், இறைமையுள்ள அரசுகளின் பாதுகாப்பில் அப்போது நிலவிய கரிசனையும் மனித உரிமை மீறல் தொடர்பிலான கண்டனங்களையும், யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுவற்றதாக்கியிருந்தன.
விடுதலைப்புலிகளும் அரச படைகளின் இராணுவ பலத்திற்கு சளைக்காமல் தமது யுத்த தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி எதிர் சமராடியிருந்த போதிலும், இராணுவத்தினர் பயன்படுத்திய அதிவலுவுள்ள உத்திகளும், பொதுமக்கள் என்றும் விடுதலைப்புலிகள் என்றும் பாராமல் சகட்டு மேனிக்கு தாக்குதல்களைத் தொடுத்திருந்த போக்கும், யுத்தச் சூழலில் சிக்கியிருந்த பொதுமக்களுக்கான மனிதாபிமான சேவைகளைக் கூட போர் உத்திக்கான மூலோபாயமாக மாற்றியிருந்தமையும், இந்த யுத்த மோதல்களில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற முடியாமல் போயிருந்தது.
அதேநேரம், படிப்படியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பைக் கபளீகரம் செய்து, பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதேசங்கள் மீதும், மனிதாபிமான வைத்திய சேவைகள் இடம்பெற்ற வைத்திய நிலையங்கள் மீதும் நடத்தப்பட்ட அகோரமான தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் அழிந்து போனார்கள்.
மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உணவுப் பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் மட்டுமே, யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிக்குள் அனுமதித்திருந்த அரசாங்கம், அந்தப் பொருட்கள், அங்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டபோது, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அடித்துப் பிடித்துக் கொண்டு அலைமோதிய இடங்களையும் இலக்கு வைத்து அரச தரப்பினர் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இதனால் உணவுப் பொருட்களை வாங்கச் சென்றிருந்த பலர் உடல் சிதறி பலியாகிப் போனார்கள். வெளியிடங்களில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் காயமடைந்து அடுக்கடுக்காகப் பதைபதைத்து வைத்திய நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கு உரிய இட வசதியும், போதிய மருந்து மற்றும் உபகரணங்கள், பொருட்கள் இல்லாமலும் வைத்தியர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் அவலப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் அங்கு இடம்பெற்ற அவலங்களையும் அகோரத்தையும் பலர் நேரில் கண்டுள்ளார்கள். அவற்றில் காயமடைந்து உயிர் தப்பிய பலர் இன்னும் அந்தக் காட்சிகளை மெய் நடுங்க உள்ளம் வருந்தி சோர்வடைய மறக்க முடியாமல் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, விடுதலைப்புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும், அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் கிளியரன்ஸுசுக்காக உடனடியாகப் புயல்வேகத்தில் பிரவேசித்த படையினர் அங்கு பதுங்கு குழிகளிலும், மறைவிடங்களிலும், பதுங்கியிருந்தவர்கள், மீதும் வெளியில் வந்தவர்கள் மீதும் சரமாரியாகத் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாக அந்தச் சம்பவங்களில் தெய்வாதீனமாக உயிர்தப்பி வந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.
யுத்தமோதல்கள் முடிவடைந்ததை அறியாத நிலையில் அகோரமாக இடம்பெற்ற தாக்குதல்களில் சிறிது இடைவெளி கிடைத்திருப்பதாகக் கருதி வெளியில் வந்தவர்களும், திடீரென ஓய்ந்த துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை தாக்குதல்களும் மீண்டும் தொடரக்கூடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து மறைந்திருந்தவர்களுமே இவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
யுத்த மோதல்களில் மட்டுமல்லாமல், யுத்தம் முடிவடைந்த பின்னர், திடீரென இராணுவத்தினருடைய பிரசன்னத்தைக் கண்ட மக்கள் பேயைக் கண்டதுபோன்று மிரண்டு போனார்கள். அவ்வாறு திடீரென சென்ற படையினரும், விடுதலைப்புலிகள்தான் அவ்வாறு இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்திலும் அச்சத்திலும் அவர்கள் மீது கடுமையாகவே நடந்து கொண்டதாகவும் தப்பி வந்தவர்கள் கதை கதையாகக் கூறியிருக்கின்றனர்.
யுத்த மோதல்களில் உயிர்தப்பியிருந்த பொதுமக்கள் அனைவரையும் அழைத்து வந்த இராணுவத்தினர், திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்குள் - ஒரு சிறிய இடத்தில் அடைத்தபோது, அங்கு அனுபவித்த வேதனைகளை பலர் இப்போதும் நினைவுகூர்கின்றார்கள். போதிய உணவில்லை. குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத நிலையில் உடல் சோர்ந்து, மோதல்களில் உயிர்தப்புவது தெரியாமல் உள்ளம் கலங்கி வாடிக்கிடந்த அவர்கள் திடீரென இராணுவத்தினரைக் கண்டபோதும்,
அவர்களால் ஒரு சின்னஞ்சிறிய இடத்திற்குள் பெரும் எண்ணிக்கையான மக்களை அடைத்தபோதும் அவர்கள் அச்சத்தில் மேலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பல மணித்தியாலங்கள் அங்கு அடைபட்டுக்கிடந்தபோது எரிக்கும் வெய்யிலிலும், உடனிருந்தவர்களின் உடல் வெப்பத்திலும் அவர்களின் உடல்களும் உள்ளங்களும் தகித்து தவித்ததாகவும், அந்த வேதனைகளை விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் வெறுமனே சொற்களில் விபரிக்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
'முள்ளுக்கம்பி கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தபோது இருப்பதற்குக் கூட இடமில்லை. நெருக்கியடித்துக்கொண்டு இருந்த நாங்கள் அப்போது பசி, தாகம், உள்ளத் தவிப்பு என பல வழிகளிலும் மரண வேதனையையே அனுபவித்தோம். அதனை இப்போது நினைத்தாலும்கூட, உடல் நடுங்குது. மனதுக்குள் என்னவோ செய்யிது' என்று இறுதி யுத்தத்தில் சிக்கி உயிர்தப்பி வந்துள்ளவர்கள் பலரும் கூறுகின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்த பின்னர், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து, நந்திக்கடல் ஊடாக வந்தபோதும், மறுபக்கத்தில் வட்டுவாகல் ஊடாக இராணுவத்தினரிடம் வந்தபோதும், உயிர் தப்பி வந்தவர்கள், ஆங்காங்கே சிதறிக்கிடந்த இறந்த உடல்களில் இடறிய வண்ணமே வந்ததாகத் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் குவியல்களாக இறந்து கிடந்தவர்கள் மீது ஏறி வர நேர்ந்ததையும் இப்போதும் எண்ணி கண்கள் குளமக மனம் கலங்குகின்றார்கள்.
இது மட்டுமல்லாமல் அகோரமாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பலர் உடல் சிதறி இறந்து கிடந்த காட்சிகளைக் கண்டவர்களும் குழந்தைகள் பெண்கள், வயோதிபர்கள் என அவர்கள் அலங்கோலமாகக் கிடந்ததைக் கண்டதும், கைகால்கள் உடைந்து தொங்கிய நிலையிலும், அவயவங்கள் இல்லாமலும் இரத்தப்பெருக்குடன் கிடந்தவர்களைக் கண்ட பின்னரும் என்ன செய்வது என்று தெரியாமல் பேயறைந்த நிலையில் அச்சத்தில் மனம் இறுகிப் போயிருந்தபோது, கையாலாகாத நிலையில் தாங்கள், உயிர் தப்புவதற்காக அந்த இடத்தைவிட்டுத் தட்டுத் தடுமாறி வெளியேறி வந்ததையும் பலர் எண்ணிக் கலங்குகின்றார்கள்.
இவ்வாறு முள்ளிவாய்க்காலின் சோகங்களைப் பல்வேறு வழிகளிலும் மனதுக்குள்ளேயே எண்ணிக் கலங்கி மருகித் தவிக்கின்ற பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு வெளிப்படையாக தங்களுடைய சோகங்களைப் பகிர்ந்து கொள்ளவோ, இறந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தவோ முடியாத நிலைமையானது மிகவும் மோசமானது. தமிழ் மக்களுக்கான மனித உரிமை மீறலாகும் என்று தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் ஆறாம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை குறித்து தமிழ் சிவில் அமையத்தினர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பலரும், இந்த உரிமை மறுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ளதுடன், அந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்ற ரீதியிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.இறந்தவர்களை நினைவுகூர்வதைத் தடுத்திருந்தது மட்டுமல்லாமல், அந்த அவலச்சாவுகளின் அடையாளங்களையே அரச படையினர் இல்லாமல் செய்திருப்பது மோசமான நடவடிக்கை என்று அவர் சாடியிருக்கின்றார்.ஆயுதப் போராட்டத்தில் முன்னர் ஈடுபட்டிருந்த ஜே.வி.பி. மற்றும் புளொட், ஈபி.ஆர்.எல்.எவ்., டெலோ போன்ற தமிழ் ஆயுத அமைப்புக்களும், அரச படைகளாகிய இராணுவத்தினரும், இறந்து போன தமது சகாக்களை நினைவுகூரவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த நாட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் யுத்த மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் யுத்த மோதல்களிலும், குறி வைக்கப்பட்ட சிவில் இலக்குகளிலும், இறுதி யுத்தத்தின்போது மடிந்துபோன தமிழ் மக்களையும் நினைவுகூர்வதை முன்னைய அரசாங்கம் தடை செய்திருந்தது. இந்த நாட்டில் இதன் மூலம் இறந்தவர்களை நினைவுகூர்வதிலும் கூட அப்பட்டமாக பாகுபாடு காட்டப்பட்டிருக்கின்றது என்று ருக்கி பெர்னாண்டோ சாடியிருக்கின்றார். யுத்தத்தில் இறந்துபோன பொதுமக்களையும் எல்.ரி.ரி.யி.னரையும் நினைவுகூரவிடாமல் தடுத்திருந்தமையானது தமிழ் மக்களுக்கான உரிமை மீறலாகும் என தெரிவித்திருக்கின்றார்.
யுத்த மோதல்களிலும் யுத்தச் செயற்பாடுகளின்போதும் மடிந்து போன தமது உறுப்பினர்களின் மரணத்தைப் புனிதமாகக் கருதிய விடுதலைப்புலிகள், அவர்களுக்கென துயிலும் இல்லங்கள் என்ற பெயரில் நிலையங்களை அமைத்து அதனை மிகவும் பௌத்திரமாகப் பேணி வந்தார்கள்.
யுத்தத்தில் வெற்றிகொண்ட இராணுவத்தினர் அந்த மாவீரர் துயிலும் இல்லங்களை அடித்து நொறுக்கி புல்டோசர்களை விட்டு இடித்து அழித்ததுடன், அந்த இடங்களில் தமது முகாம்களையும் விளையாட்டு மைதானங்களையும் அமைத்து அவமானப்படுத்தும் வகையில் செயற்பட்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் ஏனைய நினைவுச் சின்னங்களையும் அவர்கள் இல்லாமல் உடைத்து அழித்துவிட்டு, இராணுவத்தினரின் நினைவுச் சின்னங்களையும் அவர்களின் வெற்றிச் சின்னங்களையும் அமைத்திருக்கின்றார்கள். இது மோசமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ருக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற துயரமான சம்பவங்கள் வெளியில் தெரியவந்துவிடும் என்று இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருந்தது. இறந்தவர்களையும் அவர்கள் இறந்துபோன அந்தச் சந்தர்ப்பங்களையும் மக்கள் நினைவுகூரும்போது உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அங்கு என்ன நடந்தது என்பதுபற்றிய உண்மை வெளியில் தெரியவந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு அரசாங்கம் தடுத்திருக்க வேண்டும். அதேநேரம் எல்.ரி.ரி. யினர் மீண்டும் ஒன்றிணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இவ்வாறு நினைவுகூர்வது அமைந்துவிடும் என்று அரசாங்கம் எண்ணியிருக்கவும் கூடும் என ருக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே அரசாங்கமும்சரி, ஜே.வி.பி., மற்றும் எல்.ரி.ரி.ஈ. போன்றவர்களும் சரி, தாங்கள் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை. அத்துடன் இவ்வாறான நினைவுகூர்தலின் மூலம் அந்தத் தவறுகள் நினைவுபடுத்தப்படுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை. அவைகள் அவ்வாறு வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அவர்கள் எதனையும் செய்வதற்குத் தயாராகவும் இருந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக முன்னைய அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கின்றது. இது மிகவும் தவறானது. இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ சமூக அடிப்படையிலோ நினைவுகூரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதனைத் தடைசெய்ய முடியாது என்றும் ருக்கி பெர்னாண்டோ அடித்துக் கூறியிருக்கின்றார்.
நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நல்லாட்சி நிலவுவதாகக் கூறப்பட்டபோதிலும், யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வது பற்றியோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ புதிய அரசாங்கம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இன்னும் எதனையும் தெரிவிக்கவில்லை.
ஆயினும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தியது தொடர்பில் வடமாகாண உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பொலிசார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விசாரணை செய்திருந்தனர். தமது தலைமையகத்தில்; இருந்து வந்த உத்தரவுக்கு அமைவாகவே ரவிகரனை தாங்கள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிசார் அவரிடம் கூறியிருந்தார்கள்.
அரச உயர் மட்டத்திலும், அதற்கு அடுத்த நிலைகளிலும் புதிய ஆட்சியில் சில மாற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும், அடிமட்டத்தில் உள்ள படையினர், புலனாய்வாளர்களின் செயற்பாடுகளில் பெரிய மாற்றங்கள் எதனையும் காண முடியவில்லை.
மே 18 ஆம் நாளாகிய முள்ளிவாய்க்கால் சோகத்தை நினைவுகூர்வதைத் தடுக்கும் நோக்கத்திற்காகவே மாவீரர் தினத்தன்று அஞ்சலி செலுத்தியதுபற்றி பல மாதங்களின் பின்னர் தன்மீது பொலிசார் விசாரணையை நடத்தியிருக்கலாம் என்று ரவிகரன் சந்தேகம் வெளியிட்டிருந்தார். புதிய ஆட்சியில் முள்ளிவாய்க்கால் சோகத்தின் நினைவேந்தலுக்கு என்ன நடக்கும் என்பது பதற்றம் நிறைந்த யோசனையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது அமைந்திருக்கின்றது.