போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த கடமைப்பட்டுள்ளது அமெரிக்கா – சூசன் ரைஸ்
இலங்கை உள்ளிட்ட நாடுகளில்- இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
நியூஜேர்சியில் உள்ள செற்றன் ஹோல் பல்கலைக்கழகத்தில், டொனான்ல்ட் எம் பைன் குளோபல் பவுண்டேசன் விரிவுரைத் தொடரில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘கொடூரங்கள் இழைக்கப்படும் போது, உலகெங்கும் நாம் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துகிறோம்.
இலங்கை, கிர்கிஸ்தான்,லிபியா, ஐவரிகோஸ்ட் மற்றும் மிக அண்மையில் வடகொரியாவில்- நிகழ்ந்த அட்டூழியங்கள்- குற்றங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிய உதவும் விசாரணைக் குழுக்களை அமைக்கவும், பொறிமுறைகளை உருவாக்கவும் நாம் ஆதரவளித்துள்ளோம்.
எந்தவொரு அனைத்துலக நீதிமன்றத்தினாலும் கொடுமைகளை இழைத்தவர்களாக குற்றம்சாட்டப்பட்ட தனிநபர்களை கைது செய்வதற்கான தகவல்களை வழங்குவோருக்கான பணப்பரிசுகளை அறிவிக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை வி்ரிவாக்கும் சட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
அறிவுக்கு ஒவ்வாத குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என்றும் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.