புதனன்று மகிந்த – மைத்திரி சந்திப்புக்கு ஏற்பாடு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, டிலான் பெரேரா, மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன ஆகியோர், கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்தச் சந்திப்புக் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இருவரும் சந்திக்க வேண்டியது அவசியம் என்றும் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரை அனுப்பி, மகிந்த ராஜபக்சவை சந்திப்புக்கு அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேவேளை, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, மகிந்தானந்த அளுத்கமகே, ரி.பி.எக்கநாயக்க, காமின லொக்குகே ஆகியோர், நாளை ஜனாதிபதியைச் சந்தித்து வரும் புதன்கிழமை நடக்கவுள்ள சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவுள்ளனர்.