பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு நான் கேட்கவில்லை! மறுக்கிறார் மஹிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது தான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகவோ அல்லது வேறு விடயம் தொடர்பாகவோ எதுவும் கேட்கவில்லையெனவும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை அது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தும் பிரிவே தீர்மனிக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள அபயாராம விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக பிரதமர் வேட்பாளராக நியமிககுமாறு கோரியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் தொடர்பாகவோ அல்லது வேறு விடயம் தொடர்பாகவோ எதுவும் அவரிடம் கேட்கவில்லை பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை அது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தும் பிரிவே தீர்மனிக்கும். எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தான் எந்தப் பதவியையும் கேட்டுப்பெறப்போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்பது உட்பட ஐந்து முக்கிய கோரிக்கைளை மகிந்த தரப்பினர் முன்வைத்தார்கள். இதில், இரண்டு கோரிக்கைகள் குறித்து கட்சியின் மத்திய குழுவே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்த மைத்திரி தரப்பினர், ஏனைய மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்திருந்தார்கள்.