Breaking News

இலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப் படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் உரையாற்றிய போது, இலங்கை அரசாங்கம் கோடை காலத்தின் போது பொதுத்தேர்தலை நடத்தும் எனக் கூறியிருந்தார்.

கெரி தனது உரையில் அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடுகள் சிலவற்றையும் வெளிப்படுத்தியிருந்தார். மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை தொடர்பான போர்க்குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை இணங்க வைத்திருந்தார்.

உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதற்கான உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இது தொடர்பான விசாரணை அறிக்கையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற நிபந்தனையுடன், இலங்கைக்கு காலஅவகாசத்தை அமெரிக்கா வழங்கியிருந்தது.

ஆனால் இதுவரை மைத்திரி அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதற்கான எவ்வித உள்நாட்டுப் பொறிமுறையையும் உருவாக்கவில்லை. இலங்கைக்கு எதிராக செப்ரம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையை முன்வைப்பதற்கான சாத்தியங்களை வரையறுக்க முடியாதுள்ளது.

இவ்வாறான சமிக்கைகள் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘ஆச்சரியங்களை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான அறிக்கையை செப்ரெம்பரில் வெளியிடவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் என்னிடம் உறுதியளித்துள்ளார்’ என சொல்கெய்ம் தனது ருவிற்றர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு பொறிமுறையையும் வரையாதுள்ள போதிலும், நாடாளுமன்றில் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டதன் மூலம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஒரு படி முன்னேறியுள்ளதாக அமெரிக்காவும் ஜோன் கெரியும் நம்புகின்றனர்.

18வது திருத்தச்சட்டத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிறைவேற்றிய போது அதனை எதிர்த்து அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்கா கருதியது. இலங்கை அரசியல் யாப்பில் 18வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா இன்று அதிருப்தியடைந்துள்ளது. இந்த சட்டத்திருத்தமானது அரசியல் யாப்பின் அடிப்படை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதுடன் பலவீனப்படுத்துகின்றது’ என செப்ரெம்பர் 11, 2010 அன்று அமெரிக்காவின் வோசிங்டன் டி.சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள 18வது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கூர்ந்து அவதானிப்பதாகவும் இதன் நகர்வுகள் தொடர்பாகவும் கண்காணிப்பதாகவும் அமெரிக்காவின் முன்னாள் பொதுவிவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் பிலிப் ஜே க்றெளவ்லி தெரிவித்திருந்தார்.

‘இலங்கையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமானது நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிலவற்றை இல்லாதொழிக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி கொண்டிருந்த இந்த அதிகாரங்கள் தேர்தல், காவற்றுறை, மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள், நீதிச் சேவை போன்ற பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்டுள்ளன’ என ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

நல்லாட்சி, ஜனநாயகம், சுயாதீன அரச நிறுவகங்கள் போன்றவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘இலங்கை அரசாங்கமானது பொருத்தமான, தகைமையுடைய அதிகாரிகளை சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவதற்கு நியமித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், அதிகாரத்தைப் பகிர்தல் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதை ஊக்குவித்தல், தேசிய மீளிணக்கப்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உட்பட ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான அளவீடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ என இலங்கைக்கான தனது அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற 18வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக 19வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையை ஜோன் கெரி கொழும்பிற்கான தனது பயணத்தின் போது பாராட்டினார். போர்க்குற்ற விவகாரத்திலிருந்து மகிந்த தப்பிக்க விரும்பினால் 18வது திருத்தச் சட்டத்தை நிர்மூலமாக்குவதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குமாறு மகிந்தவிடம் அமெரிக்கா மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியிருந்தது.

தனக்கு அரசியல் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் மகிந்த சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க அச்சப்பட்டார். இதனாலேயே இவர் இந்த விடயத்தை இரகசியமாகப் பேணியிருந்தார். மகிந்த ராஜபக்ச அமெரிக்காவை விமர்சிப்பதற்காக தனது நாட்டிற்குள்ளேயே அமெரிக்காவிற்கு எதிர்ப்பு உளவியலை உருவாக்கினார்.

இதற்கு முரணாக, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவின் ஆலோசனைக்கு அமைவாக, 18வது திருத்தச் சட்டத்தை ஒழித்து அதற்குப் பதிலாக 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.

செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கான நம்பிக்கையைத் தற்போது மைத்திரி அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெறும் போது, விசாரணைகள் நடாத்துவதற்கான அல்லது இவ்வாறான அறிக்கைகளை முன்வைப்பதற்கான தார்மீக உரிமையை குறித்த நாடு கொண்டிருக்கத் தேவையில்லை. நாடாளுமன்றிலுள்ள மகிந்தவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கான பொறிமுறைக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது.

ஆகவே ஒரு புதிய ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கு தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டியது அவசியமாகும். மைத்திரியின் இவ்வாறான வேண்டுகோளை அமெரிக்காவானது ஒரு நல்லெண்ணமாகக் கருதியிருக்கலாம்.

இதன் காரணத்தாலேயே கோடை காலத்தில் இலங்கை தனது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜோன் கெரி ஆலோசனை வழங்கியிருக்க முடியும். இலங்கையின் பொதுத் தேர்தலானது செப்ரம்பருக்கு அப்பால் இடம்பெற்றால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை இடைநிறுத்துவதற்கு எவ்வித வழிவகையும் காணப்படாது.

கடந்த மார்ச் மாதம் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்த அறிக்கை செப்ரெம்பரில் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் மேலும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தை கெரி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்த மாநிலத்தில் புலம்பெயர் தமிழர்கள் மிகப் பலமான இடத்தில் உள்ளனர். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஊடாக 1981ல் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமீழீழத்தை உருவாக்குவதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தனர்.

இந்த மாநிலத்தில் கெரியின் ஆதரவைப் பெறுவதற்கான பணிகளில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில், கெரியின் ஆதரவை வெற்றிகரமாகப் பெற்றுக் கொள்வது மைத்திரி அரசாங்கத்தின் வெற்றியை நிச்சயமாக்கும்.

 – உபுல் ஜோசப் பெர்னான்டோ