வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் மஹிந்தவின் செயற்பாடுகளை கண்டிக்கிறோம்!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வடக்கை மீண்டும் அடக்குமுறை பகுதியாக மாற்ற முயற்சிப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வித்தியாவின் படுகொலையினால் மக்களின் நியாயமான கோபத்தை வன்முறையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். இதன் பின்னணியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
வித்தியாவின் கொலை தொடர்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் மற்றும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்,
வித்தியாவின் படுகொலை இன்று இலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்த கொலைச் சம்பவம் வடக்கு ,கிழக்கு மற்றும் தமிழர் பிரதேசங்களில் மட்டுமே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இப்போது இது தலைநகர் முதற்கொண்டு அனைத்து பகுதியில் உள்ள மக்களின் கவனத்துக்கும் வந்துள்ளது.
மக்கள் கிளர்ந்தெழுந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மனித உரிமையை கட்டியெழுப்பும் ஒரு விடயமாகும். இவ்வாறான சம்பவம் நாட்டில் எந்தப் பகுதியில் யாருக்கு ஏற்பட்டாலும் அது நாட்டு மக்கள் அனைவரையும் பாதித்துவிடும். ஆகவே இந்த போராட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த மாணவியின் கொலை மிகவும் கொடூரமானதொன்றாகும். இம் மாணவியை கொலைசெய்த விதம், சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் செயற்பாடுகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் கோபத்தையும் வெறுப்பினையும் தூண்டியுள்ளது. மனிதாபிமானமற்ற ஒரு செயலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலைமையில் இருந்து சமூகம் முற்றுமுழுதாக மாறவேண்டுமாயின் மக்களின் எழுச்சி மிகவும் அவசியமானதாகும். அதன் விளைவே ஜனாதிபதி நிலைமைகளை உணர்ந்தவராக வடக்குக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுமெனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார். இதுவே எமது நாட்டில் நடக்கும் இறுதியான மோசமான சம்பவமாக இருக்க வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகும்.
கேள்வி: வித்தியாவின் படுகொலையை இனவாத அரசியல் ரீதியில் முன்னெடுத்து செல்கின்றனர். இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் மனிதாபிமானத்துக்கு எதிரானதொரு செயற்பாடாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தக் குற்றச் செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறாமல் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயலில் அரசியல் இலாபம் தேடவும், மிகவும் கீழ்த்தரமான வகையில் இனவாதத்தை தூண்டிவிடவும் நினைப்பது வருந்தத்தக்க விடயமாகும். இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயற்பட்டவர் இவ்வாறான இனவாதம் பரப்பும் செயல்களை மேற்கொள்வதும் வடக்கில் மீண்டும் அடக்குமுறைகளை மேற்கொள்ள தூண்டுவதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கேள்வி : வடக்கில் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதே இது உண்மையா ?
புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரச் செயற்பாட்டால் மக்கள் தமது நியாயமான கோபத்தை வெளிக்காட்டி மிகவும் ஒழுங்கான முறையில் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். ஆனால் அவற்றை வன்முறையாக மாற்றி அதன் மூலமாக நடக்கவிருக்கும் அடுத்தகட்ட விடயங்களையும் நடக்காமல் தடுக்கும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றது.
ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் எழுச்சி செயற்பாடுகளில் வன்முறைகளை தூண்டுகின்ற செயற்பாடுகள் மேற்கொண்டுதான் நீதி மன்றம் மீது கற்கள் வீசியதும் வேறு விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மக்கள் நியாயத்தை கோரி எழுந்து நிற்கும் நிலைமையில் அதை தடுக்கும் வகையில் செயற்படுவது மிகவும் மோசமானதொரு செயற்பாடாகும். இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதன் பின்னணியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.