ஜோன் கெரியின் பயணம் உணர்த்தும் செய்தி என்ன?
நான்கு தசாப்தங்களின் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
1972ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பியேர்ஸ் ரோஜர், இலங்கைக்கு ஒரு குறுகிய நேர அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டதற்குப் பின்னர், இப்போது தான், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் அதிகாரபூர்வ பயணமாக இலங்கை வந்திருக்கிறார்.
நேற்று கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தனது பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு, கென்யத் தலைநகர் நைரோபிக்குச் செல்லவுள்ளார். எனும், அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இலங்கைப் பயணம் குறித்த முரண்பட்ட குழப்பமான தகவல்கள், ஊடகங்களில் மட்டுமன்றி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கூட வெளியிடப்பட்டது.
அதாவது, ஜோன் கெரிக்கு முன்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது எப்போது என்பதே அந்தக் குழப்பம். சில ஊடகங்கள் 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராஜாங்கச் செயலர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்று குறிப்பிட்டன. சில ஊடகங்கள் 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் பயணம் என்று குறிப்பிட்டன.
அதேவேளை, கடந்த திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பேச்சாளர் பணியகத்தின் பதில் பேச்சாளரான, மேரி ஹாப், ஜோன் கெரியின் இலங்கை, கென்ய, டிஜிபோட்டி பயணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் கடைசியாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது, 2005ஆம் ஆண்டு என்பதே சரியானது. அதுபோல, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர், அரசுமுறைப் பயணமாக கடைசியாகப் பயணம் மேற்கொண்டது என்றால், அது 1972ஆம் ஆண்டு தான்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 26ஆம் திகதி ஆசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியை அடுத்து, உதவி மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. அமெரிக்க கடற்படையின் 1,500 மெரைன் படையினரும், 20 ஹெலிக்கொப்டர்களும், இலங்கையில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் உதவியிருந்தன.
அதனை மேற்பார்வை செய்வதற்காகவும், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, தேவைப்படும் உதவிகள் குறித்து, அப்போதைய ஜனாதிபதி ஜோர்ச் புஷ்ஷுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும், அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜெனரல் கொலின் பவல் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி அவர் இலங்கைக்கு ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்ததுடன், காலியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையினரையும் சந்தித்திருந்தார். அதற்குப் பின்னர், கிட்டத்தட்ட, 10 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இப்போது, கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
ஆனால், 2005ஆம் ஆண்டு ஜெனரல் கொலின் பவல், இலங்கைக்கு மேற்கொ ண்ட பயணத்துக்கும், இப்போது, ஜோன் கெரி மேற்கொள்ளும் பயணத்துக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஜெனரல் கொலின் பவல், ஒரு அனர்த்த மீட்பு பணியை பார்வையிடுவதற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, உதவித் திட்டங்களை அறிவிப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார்.
அது சடுதியான தீர்மானங்களால் மேற்கொள்ளப்பட்டதொன்றே தவிர, அழைப்பின் பேரிலோ, முன்கூட்டியே திட்டமிட்ட அடிப்படையிலோ இடம்பெற்றதல்ல. அதனால் அது அரசுமுறைப் பயணமாக அமையவில்லை. ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, அரசுமுறையிலான அதிகாரபூர்வ பயணமாக செல்ல முடியும். அல்லது தனிப்பட்ட பயணமாக செல்ல முடியும். அல்லது மாநாடுகள், வேறேதும் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் செல்ல முடியும்.
அரசுமுறைப் பயணம் என்பது, குறிப்பிட்ட நாட்டின் அழைப்பின் பேரில் இடம்பெறுவது. அந்த பயணத்தின்போது அனைத்து கௌரவம், மரியாதைகளையும் குறிப்பிட்ட நாடு அளிக்க வேண்டும். இதன் போது இருதரப்பு பேச்சுக்களை நடத்த முடியும். ஆனால், மாநாடுகள், வேறு நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதோ, அல்லது தனிப்பட்ட பயணமாக இன்னொரு நாட்டுக்குச் செல்லும் போதோ, அந்த நாடு மரியாதை, கௌரவம் எதையும் அரசு ரீதியாக அளிக்கத் தேவையில்லை.
அண்மையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குருவாயூருக்குச் சென்றதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொமன்வெல்த் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றதோ, அரசுமுறைப் பயணங் கள் அல்ல. ஆனால், சீனா, இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி சென்றது அரசுமுறைப் பயணமாகும். அதுபோலத் தான், 2005ஆம் ஆண்டு ஜெனரல் கொலின் பவல், இலங்கை வந்தது, தற்செயலானது. அது இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் அல்லது விரிவாக்கும் நோக்கம் கொண்டது அல்ல.
அதற்கு முன்னதாக, 1972ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த, வில்லியம் பியேர்ஸ் ரோஜர் இலங்கைக்கு மேற்கொண்டது தான், கடைசியாக ஜோன் கெரிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட, அமெரிக்க இராஜாங்கச் செயலரின் அரசு முறைப் பயணமாகும். அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம், வில்லியம் பியேர்ஸ் ரோஜர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அதற்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர், இப்போது தான் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த, ஹிலாரி கிளின்டன், இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததையடுத்து, ஜோன் கெரி அமெரிக்க இராஜாங்கச் செயலராகப் பதவியேற்ற போது, அதிகாரத்தில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ கொஞ்சம் நிம்மதி கொண்டிருந்தார்.
அதற்குக் காரணம், ஹிலாரி கிளின்டன், இராஜாங்கச் செயலராக இருந்த போது தான், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஜெனீவாவில் கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்திருந்தது. அவர் பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
எனவே அவர் இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விலகிச் செல்வதை மஹிந்த ராஜபக்ஷ விரும்பினார். அதைவிட, போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009 செப்டெம்பர் மாதம், அப்போது அமெரிக்க செனட்டின் வெளிவிவகாரக் குழுத் தலைவராக இருந்த ஜோன் கெரி, SRI LANKA RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பித்திருந்தார்.
அதில் இலங்கையை, அமெரிக்காவின் முக்கியமான பங்காளி என்றும் நட்பு நாடு என்றும் விபரித்திருந்ததுடன், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளை ஜோன் கெரியின் கால த்தில் அமெரிக்கா அவ்வளவு இறுக்கிப் பிடிக்காது என்று தப்புக்கணக்குப் போட்டிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
ஆனால், ஜோன் கெரியின் காலத்தில் தான், மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக, ஜெனீவாவில் கடுமையான தீர்மானம் கொண்டு வரப்பட்டது மட்டுமன்றி, ஐ.நா விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. அதைவிட, தன்னைப் பதவி கவிழ்ப்பதிலும், அமெரிக்கா முக்கிய பங்காற்றியதாக, மஹிந்த ராஜபக்ஷ இப்போது குற்றம்சாட்டி வருகிறார்.
இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில், இராஜாங்கச் செயலராகப் பதவியேற்க முன்னரே, ஜோன் கெரி தெளிவான நிலையில் இருந்து வந்தவர். ஆனால், அதற்கான உகந்த சூழல், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இல்லை என்று உணர்ந்து கொண்ட போது, மாற்றுவழிகளில் செயற்பட்டிருந்தது, அவரது தலைமையிலான இராஜாங்கத் திணைக்களம்.
இப்போது, மஹிந்த ராஜபக்ஷ அதிகா ரத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தான் ஜோன் கெரி இலங்கை வந்திருக்கிறார். தற்போதைய அரசாங்கத்தின் சார்பில், கடந்த பெப்ரவரி மாதம், வொஷிங்டனுக்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்திருந்த அழைப்பின் பேரில், அவர் கொழும்பு வந்திருக்கிறார்.
ஆனால், முன்னைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜி.எல்.பீரிஸும், இலங்கைக்கு வருமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு முடிந்தவுடன், ஜோன் கெரி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ வுடன் பேசியிருந்தார். அப்போது தான் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்திருந்தது.
தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியாக அதிகாரத்தைக் கைமாற்ற வேண்டும் என்பது குறித்தே அப்போது மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜோன் கெரி வலியுறுத்தியிருந்தார். அதனை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியதால் தான், மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தைக் கைவிட மறுநாள் அதிகாலையிலேயே முடிவு செய்திருந்தார்.
கடைசியாக ஜோன் கெரி, மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய போது, வெற்றி பெற்றவுடன் தொடர்பு கொள்வதாக கூறியதுடன், இலங்கை வருமாறு பீரிஸ் விடுத்த அழைப்பையும் நினைவுபடுத்தியிருந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவினால், கடைசி வரையில், அமெரிக்க இராஜாங்கச் செயலரை இலங்கைக்கு அழைத்துவர முடியவில்லை.
ஆனால், இப்போதைய அரசாங்கத்தினால் அதனை ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே சாதிக்க முடிந்துள்ளது. இலங்கையை, முக்கியமான பங்காளியாக - நட்பு நாடாகப் பார்க்கும், ஜோன் கெரி போன்ற அமெரிக்க அதிகாரிகள், இலங்கை யாருடைய அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதிலும், கவனம் செலுத்துகிறார்கள்.
இப்போதைய அரசாங்கத்தை ஊக்குவிப்பதன் ஒரு கட்டமாகவே, ஜோன் கெரியின் பயணம் அமைந்திருக்கிறது. அதேவேளை, ஜோன் கெரி மட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட இலங்கைக்கு வரலாம் என்று, வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகங்கைத் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது.
அதாவது, இலங்கையில் உள்ள அரசி யல் சூழல் மற்றும், தேவைப்பாடுகள் அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தால், ஒபாமாவைக் கூட இலங்கை மண்ணில் காண முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிட்டி னால், அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் முதலாவது இலங்கைப் பயணமாக அது அமையும்.
-ஹரிகரன்