Breaking News

ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உலகளாவிய ரீதியில் இன்று (01) கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினம் குறித்து நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் தனது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

நல்லாட்சியின் அம்சங்களின் கீழ் ஒன்றாக செயற்பட உறுதி பூணுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தொழிலாளர் சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலாளர் சார் ஆட்சியினூடாக சுதந்திரமான மற்றும் ஜனநாயக முறையில் இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கு தொழிலாளர் வர்க்கத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மே தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் உட்சாகமாகவும் அபிமானத்தோடும் செயற்படுவதற்கான ஜனநாயக சுதந்திரத்தையும் வேலைத்தளத்திற்கு தொழிலாளர்கள் சமாதானத்துடன் ஒன்றுகூடி வினைத்திறனுடன் செயற்படுவதற்கான உரிமையையும் நாட்டில் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.

தியாகத்தினூடாக பெற்றுக் கொண்ட வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையை தொடர்ந்தும் பேண வேண்டும் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உழைப்புக்கு உரிய கௌரவத்தையும் பெறுமதியையும் பெற்றுக் கொடுத்து தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களின் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான பிண்ணனியை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மே தினம் தொடர்பில் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் புரட்சியை வெற்றிக் கொண்டு தேசத்தின் வெற்றிக்காக பாடுபடுவதற்கு உதயமாகியுள்ள புதிய அரசியல் கலாசாரம் உறுதுணையாக அமைய வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

மேம்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளினூடாக தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்வை எழுச்சி பெற செய்வதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் மே தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் நாட்டின் தொழிலாளர் வர்க்கம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட முழு தேசத்தையும், இருண்ட யுகம் ஒன்றுக்குள் தள்ள முற்படும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடும் அனைவருடனும் தானும் இணைந்துக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஸ தனது மே தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தை போன்று இந்நாட்டிலும் ஆளும் முதலாளித்துவ வர்க்கம் மே தினத்தை தமது கீழ் தரமான நோக்கத்திற்காக பயன்படுத்தி அதன் தாற்ப்பரியத்தையும் அர்த்தத்தையும் திரிபுபடுத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள மே தின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கெதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முண்ணனி குறிப்பிட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் மே தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்ப பாடுபடும் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நியாயமாகவும் நேர்மையாகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்பது அனைவரது கடமை என சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏழைகளை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.