மைத்திரி அணி ,மஹிந்த அணி என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் குருணாகல் நகரில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற மஹிந்த அணியின் கூட்டத்திலிருந்து இது தெரிய வருவதாகவும் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
குருணாகலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களாவார்கள். இப்போது அக்கட்சி மைத்திரி தரப்பு, மஹிந்த தரப்பு என இரு கூறுகளாகப் பிரிந்து காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மைத்திரி, மஹிந்த சந்திப்புக்கு பின்னர் நடைபெற்ற குருணாகலை கூட்டத்தில் பெருந்தொகையான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் 50 க்கும் மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டது அக்கட்சியின் பிளவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேவேளை, பொது ஜன ஐக்கிய முன்னணியை மீண்டும் கட்டியெழுப்பி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் இடமுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் லங்கா சமசமாஜக்கட்சி யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கும் என்றார்.
இதேவேளை, பொதுத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தரப்பு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்காலத்தில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது இந்த கோரிக்கையை அரசிற்கு முன்வைக்க அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 15ஆம் திகதி உரிய காலம் முடிவடைந்த உள்ளூராட்சி சபைகளில் காலத்தை நீடிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மஹிந்த தரப்பு கோரிக்கை விடுத்த போதும் ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் சில மாதங்களில் பொது தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இது இவ்வாறிருக்க, புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வார இறுதியில் வெளியிடப்படப்படவுள்ளது. புதிய தேர்தல் முறை குறித்து சிறுகட்சிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், அந்த சட்டமூலம் எதிர்வரும் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவையின் அனுமதியின் பின்னர் மேற்படி சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புதிய தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 லிருந்து 265 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. 165 உறுப்பினர்கள் தொகுதி முறையின் கீழும் 31 உறுப்பினர்கள் மாவட்ட விகிதாசார முறையின் கீழும் 59 உறுப்பினர்கள் தேசிய விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.