மேன்முறையீட்டுக்கு பரிந்துரை அதிர்ச்சியில் ஜெயலலிதா
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேன்முறையீடு செய்ய கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞர், அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் இரத்துச் செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பில் கணக்குப் பிழை இருப்பதாகக் கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.